ஆந்திர மாநிலம் குண்டூரை சேர்ந்த நாராயண முட்டனா- ஹரிதா தம்பதியினருக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளது. அமெரிக்காவில் அரிசோனா மாகாணம் சந்த்லர் நகரில் நாராயணா தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இந்நிலையில் கிறிஸ்துமஸ் பண்டிகை விடுமுறையை முன்னிட்டு நாராயணா முட்டனாவுடன் 3 குடும்பத்தினரை சேர்ந்த 11 பேருடன் கொகொனியோ நகரில் உள்ள ஆற்றுப்பகுதிக்கு சுற்றுலாவிற்கு சென்று உள்ளனர். அங்கு நிலவி வரும் கடுமையான பனிப்பொழிவின் காரணமாக ஆறு முழுவதும் பனியால் உறைந்து உள்ளது.
அப்போது நாராயண முட்டனா அவரது குழந்தைகளை ஆற்றின் அருகே விட்டுவிட்டு நாராயணா அவரது மனைவி மேலும் மற்றொரு இந்தியரான கோகுல் மெடிசடி ஆகிய மூன்று பேரும் போட்டோ எடுப்பதற்காக ஆற்றின் மேல் நடந்து சென்றுள்ளனர். அப்போது திடீரென உறைந்த ஆற்றில் வெடிப்பு ஏற்பட்டு மூன்று பேரும் ஆற்றிற்குள் விழுந்துள்ளனர். இதனையடுத்து ஆற்றில் விழுந்த மூன்று பேரையும் மீட்பதற்காக சக உறவினர்கள் முயற்சி செய்தபோது அவர்களால் மீட்க முடியவில்லை. இது குறித்து மீட்பு குழுவினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு வந்த அவர்கள் நீண்ட நேர தேடுதலுக்கு பின் 3 பேரையும் பிணமாக மீட்டுள்ளனர். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.