தமிழ்நாட்டின் நீர்நிலைகளை சார்ந்து வாழும் பறவைகளை பாதுகாப்பதற்காக வனத்துறை பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. நடப்பாண்டில் நீர் நிலைகளில் காணப்படும் அரியவகை பறவைகள் தொடர்பான கணக்கெடுப்பு நடந்து முடிந்துள்ளது. சில மாதங்களாக வன உயிரின கடத்தல் அதிகரித்து வருவதால் வனத்துறை அதிகாரிகள் கண்காணிப்பை தீவிரப்படுத்தி யானை தந்தங்கள், அரிய வகை கிளிகளை பறிமுதல் செய்து வருகின்றனர். திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களிலுள்ள நீர் நிலைகளில் விஷம் வைத்து அரியவகை பறவைகளை கொல்வது அதிகரித்து இருக்கிறது. முன்னதாக உணவுக்காக துப்பாக்கி பயன்படுத்தி பறவைகளை வேட்டையாடிய குறவர்கள் தற்போது வணிக நோக்கில் வேட்டையாடுவது தெரியவந்துள்ளது.
தற்போது குறவர்களுக்கு புதிதாக துப்பாக்கி உரிமம் வழங்கப்படுவதில்லை என்பதால் அவர்கள் விஷம் வைத்து பறவைகளை கொன்று குவித்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது தொடர்பாக “தி நேச்சர்டிரஸ்ட்” அமைப்பின் நிர்வாகி திருநாரணன் கூறியதாவது, திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்துார் பகுதியில் அரியவகை பறவைகள் வேட்டையாடப்படுவது பற்றி வனத்துறைக்கு புகார் கொடுத்தோம். இதையடுத்து வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து நாமக்கோழி, குள்ளத்தாரா, ஊசிவால் வாத்து, நீல சிறகு வாத்து உள்ளிட்ட இனங்களில் 30க்கும் மேற்பட்ட பறவைகளின் உடல்களை மீட்டனர். அதாவது குறவர்கள் இங்குள்ள நீர் நிலைகளில் தாமரை, அல்லி இலைகளில், காலை நேரம் விஷ மருந்துகளை வைத்து விடுகின்றனர். பின் உணவுக்காக வருகிற பறவைகள் அதை உண்டு இறந்து விடுகிறது.
மாலை வேளையில் இங்கு வருகிற குறவர்கள் இறந்த பறவைகளை ஓசையின்றி எடுத்து சென்று விஷம் தேங்கிய பகுதியை நீக்கிவிட்டு உணவகங்கள், பார்களுக்கு விற்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி, கும்மிடிப்பூண்டி என்று தமிழகத்தின் பல மாவட்டங்களில் பறவைகள் வேட்டை அதிகரித்துள்ளது. ஆகவே களநிலையில் கண்காணிப்பை தீவிரப்படுத்தவும், பறவைகள் கொல்லப்படுவதை தடுக்கவும் வனத்துறை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று அவர் கூறினார். இது தொடர்பாக வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது, புகாரின்படி களத்திற்கு சென்று பறவைகளை கொன்றவர்களை பிடித்தால் 30 நிமிடங்களில் அவர்களுக்கு ஆதரவாக வழக்கறிஞர்கள் வருகின்றனர். எனவே இதன் பின்னணியில் பெரிய சங்கிலிதொடர் அமைப்பு இருக்கிறது. களஅளவில் தான் எங்களால் நடவடிக்கை மேற்கொள்ள முடிகிறது. சட்ட ரீதியாக இதனைத் தடுக்க வனத்துறை உயரதிகாரிகள் புதிய செயல் திட்டத்தையும், வழிகாட்டுதல்களையும் வகுக்க வேண்டும் என்று அவர்கள் கூறினர்.