கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் கவலைக்குரிய மாநிலங்களின் பட்டியலில் தமிழகம்,கேரளா,மகாராஷ்டிரா, டெல்லி உள்ளிட்ட மாநிலங்கள் இடம்பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒமைக்ரான் வகை கொரோனா வைரஸால் நாடு முழுவதும் பெரிய அளவில் பாதிப்படைந்து வருகிறது. இந்நிலையில் இன்று ஒரே நாளில் இந்தியாவில் 1.94 லட்சம் பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து மத்திய சுகாதாரத்துறை இணை செயலாளர் லவ் அகர்வால் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அதில் அவர் கூறியதாவது, “இந்தியாவில் தொடர்ச்சியாக கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. நாட்டில் 9,55,319 பேர் கொரோனாவுக்கு தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் கவலைக்குரிய மாநிலங்களாக மகாராஷ்டிரம், மேற்கு வங்கம், தில்லி, தமிழகம், கர்நாடகம், உத்தரப் பிரதேசம், கேரளம் மற்றும் குஜராத் உள்ளன. உலகம் முழுவதும் ஒமைக்ரானால் பாதிக்கப்பட்டவர்கள் 115 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் பாதிக்கப்பட்ட 4,868 பேரில் ஒருவர் மட்டுமே பலியாகியுள்ளனர்.
பிரதமருடன் நடைபெற்ற ஆலோசனைக்கு பிறகு குணமடைந்தோர் வீடுகளுக்கு திரும்பும் கொள்கையில் மாற்றம் செய்துள்ளோம். ஆக்சிஜன் உதவியுடன் சிகிச்சை பெறுவோர் 93 சதவீதத்தை அடைந்தவுடன் மூன்று நாள்களுக்கு பிறகு வீட்டிற்கு செல்லலாம். லேசான அறிகுறிகளுடன் சிசிச்சை பெறுவோர் தொற்று உறுதி செய்யப்பட்டு 7வது நாள் வீடு திரும்பலாம். ” என அவர் கூறினார்.