துருக்கி நாட்டில் தன்னை தீண்டிய பாம்பை 2 வயது சிறுமி ஆத்திரத்தில் கடித்து கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
கந்தர் கிராமத்தில் தான் இந்த சம்பவம் கடந்த வாரத்தில் அரேங்கேறியுள்ளது. வீட்டின் கொல்லைபுறத்தில் 2 வயது சிறுமி விளையாடிகொண்டிருந்தபோது அவளின் அலறல் சத்தம் கேட்டு குடும்பத்தார் அங்கு ஓடிவந்தனர். இந்நிலையில் சிறுமியின் உதட்டில் பாம்பு கடித்த அடையாளமும், பற்களின் இடையில் பாம்பு இருப்பதையும் கண்டு குடும்பத்தார் அதிர்ச்சியடைந்தனர்.
அதன்பின் உடனே சிறுமியை மீட்டு அருகாமையிலுள்ள மருத்துவமனைக்கு விரைந்துள்ளனர். தற்போது தீவிர சிகிச்சைக்கு பின் சிறுமி குணமடைந்து வருவதாக தெரியவந்து உள்ளது. இது தொடர்பாக சிறுமியின் தந்தை மெமத்எர்கான் கூறியதாவது, உண்மையில் அல்லாஹ் தான் என் மகளை பாதுகாத்தார். முதலில் என் மகள் கையில் பாம்பு இருந்தது. அப்போது அதனுடன் என் மகள் விளையாடி கொண்டிருந்தாளாம். அதன்பின் பாம்பு என் மகளை கடித்ததையடுத்து, அதற்கு வினையாக அவள் பாம்பை கடித்துள்ளார் என்று அக்கம் பக்கத்தினர் என்னிடம் கூறினார்கள் என தெரிவித்துள்ளார்.