2 வயது சிறுவன் ரிமோட் பேட்டரியை விழுங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலத்தில் உள்ள திருவனந்தபுரத்தில் ஒரு தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு ரிஷிகேஷ் என்ற 2 வயது மகன் உள்ளார். இந்நிலையில் இன்று வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த ரிஷிகேஷ் திடீரென ரிமோட் பேட்டரியை விழுங்கியுள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர் உடனடியாக சிறுவனை மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர்.
இதனையடுத்து மருத்துவர்கள் என்டோஸ்கோப்பி முறையைப் பயன்படுத்தி 20 நிமிடத்தில் சிறுவனின் வயிற்றில் இருந்த பேட்டரியை எடுத்துள்ளனர். மேலும் இது குறித்து மருத்துவர் ஜெயக்குமார் கூறியதாவது, “பெற்றோர் உடனடியாக சிறுவனை மருத்துவமனைக்கு அழைத்து வந்ததால் அவரது வயிற்றில் இருந்த பேட்டரியை எடுக்க முடிந்தது. மேலும் இந்த பேட்டரி உடலில் வேறு எந்த பகுதியில் சிக்கி இருந்தாலும் அது பெரும் சவாலாய் இருந்திருக்கும். ஆனால் தற்போது சிறுவன் நலமுடன் இருக்கிறார்” என கூறியுள்ளனர்.