கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. அதில் பெரும்பாலான இடங்களில் திமுக வெற்றி பெற்றுள்ளது. அதன்படி, கிருஷ்ணகிரி நகராட்சி தேர்தலில் திமுக 23 இடங்களில் வெற்றி பெற்றது. இதனை திமுக தொண்டர்கள் மிகுந்த உற்சாகத்துடன் மேளதாளங்கள் முழங்க நடனங்கள் ஆடி கொண்டாடினர்.
அப்போது கிருஷ்ணகிரி 1-வது வார்டு கோட்டை பகுதி வாக்குச்சாவடி திமுக முகவராக செயல்பட்ட 40 வயது கொண்ட பயாஸ், வாக்கு எண்ணும் மையத்திற்கு வெளியே திமுக வெற்றி பெற்றதற்கு உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டு கொண்டிருந்தார். இந்த நிலையில் அவர் திடீரென மயங்கி கீழே விழுந்தார்.
அருகில் இருந்தவர்கள் அவரை உடனே மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே மாரடைப்பால் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதனால் உற்சாக கொண்டாட்டத்தில் மூழ்கி இருந்த அப்பகுதி சோகத்தில் மூழ்கியது. அத்துடன், திமுகவினரின் உற்சாக கொண்டாட்டமும் முடித்துக்கொள்ளப்பட்டது.