வேலுர் மாவட்டம் பேரணாம்பட்டு அருகே உள்ள பல்லல குப்பம் கிராமத்தில் நேற்று கெங்கையம்மன் திருவிழா நடைபெற்றது. அங்கு ராணிப்பேட்டை மாவட்டம் ஓச்சேரி சேர்ந்த லோகநாதன் என்பவர் ரங்க ராட்டினம் அமைத்திருந்தார். நேற்று மாலை 6.45 மணியளவில் இந்த ரங்க ராட்டினத்தில் பல்லல குப்பம் மற்றும் சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த பெண்கள், இளைஞர்கள், சிறுவர்கள் என 50 க்கு மேற்பட்டோர் பொழுது போக்குக்காக ஏறி அமர்ந்திருந்தனர்.
அப்போது ரங்க ராட்டினத்தின் நடுப்பகுதியின் ஆக்சல் எனப்படும் அச்சு முறிந்து ரங்க ராட்டினமானது ஒரு பக்கமாக சரிந்தது. அப்போது பயங்கர சத்தம் கேட்டது. இதனால் திருவிழாவிற்கு வந்த பக்தர்கள் அலறி கூச்சலிட்டு ஓடினர். ரங்க ராட்டினம் ஒரு பக்கமாக சரிந்ததில் யாருக்கும் உயிர் சேதம் ஏதும் ஏற்பட வில்லை. ஆனால் பல்லல குப்பம் கிராமத்தை சேர்ந்த சபரீசன் (10) , செண்டத்தூர் கிராமத்தை சேர்ந்த சைதன்யா (11) ஆகிய 2 சிறுவர்கள் படுகாயமடைந்தனர். அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.