கத்தாரில் பள்ளி பேருந்துக்குள் தவறுதலாக பூட்டப்பட்ட சிறுமி உயிர் இழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கேரளாவின் கோட்டயம் மாவட்டத்தில் உள்ள செங்கன சேரி சேர்ந்த அபிலாஷ் சாக்கோ சௌமியா தம்பதியினர் வசித்து வருகின்றார்கள். இவர்கள் மேற்காசிய நாடான கத்தாரில் வேலை செய்து வருகின்றார்கள். இவர்களுக்கு நான்கு வயதில் மின்ஸா மரியம் ஜேக்கப் எனும் மகள் இருக்கின்றார். கத்தாரின் அல் வாக்ராவில் உள்ள ஆரம்பப் பள்ளியில் படித்து வந்த இவர் செப்டம்பர் 11ஆம் தேதி காலை பேருந்தில் பள்ளிக்கு சென்றுள்ளார். செல்லும் வழியில் பேருந்திலேயே தூங்கி உள்ளார். பள்ளி வந்ததும் மற்ற மாணவ மாணவிகள் அவரவர் வீட்டிற்கு இறங்கி சென்று விட்டனர். ஆனால் மின்ஸா பேருந்திலேயே ஆழ்ந்த உறக்கத்தில் தூங்கி உள்ளார்.
இதனை கவனிக்காத பள்ளியின் பேருந்து ஊழியர்கள் கதவுகளை அடைத்து விட்டு சென்றுள்ளனர். அதன் பின் பள்ளி முடிந்து புறப்படும் போது பேருந்துக்குள் மாணவி மயக்க நிலையில் இருந்ததை பள்ளி பேருந்து ஊழியர்கள் கண்டுள்ளனர். உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிறுமி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்த நிலையில் பேருந்து கதவுகளை அடைத்ததால் அதிக வெப்பம் மற்றும் மூச்சு திணறல் ஏற்பட்டு சிறுமி உயிர் இழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். சிறுமியின் உடலை கேரளா எடுத்து வர ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கிறது. மேலும் இந்த விவகாரம் தொடர்பான முறையான விசாரணை நடத்தப்படும் என கத்தார் கல்வி அமைச்சகம் கூறியுள்ளது.