ராஜஸ்தான் மாநில சுகாதாரத் துறை அமைச்சர் மகேஷ் ஜோஷியின் மகன் ரோஹித் ஜோஷி. இவர் மீது டெல்லியைச் சேர்ந்த 23 வயது இளம்பெண் ஒருவர், சமீபத்தில் போலீசில் பாலியல் வன்கொடுமை புகார் அளித்தார். அதில், ‘ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் அமைச்சர் மகன் ரோஹித் ஜோஷிக்கும் எனக்கும் பழக்கம் ஏற்பட்டது.
அவர் என்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி டெல்லி மற்றும் ஜெய்ப்பூரில் பலமுறை பாலியல் பலாத்காரம் செய்தார். கடந்த ஆண்டு ஜனவரி முதல் இந்த ஆண்டு ஏப்ரல் வரை வெவ்வேறு நிகழ்வுகளில் என்னை பாலியல் பலாத்காரம் செய்தார். தற்போது என்னை திருமணம் செய்து கொள்ள மறுத்துவருகிறார். மேலும் தனக்கு கொலை மிரட்டல் விடுத்து வருகிறார்.
எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூறியிருந்தார். இதையடுத்து டெல்லி போலீசார் ரோஹித் ஜோஷி மீது வழக்கு பதிவு செய்தனர். அவர் டெல்லி நீதிமன்றத்தில் முன்ஜாமீன் பெற்றார். இந்நிலையில் பாதிக்கப்பட்ட பெண், டெல்லியின் காளிந்தி குஞ்ச் சாலை அருகே தனது தாயுடன் நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது, அவ்வழியாக வந்த இருவர் திடீரென அந்த பெண்ணின் மீது கருப்பு மையை வீசிவிட்டு தப்பிச் சென்றனர். அதிர்ச்சியடைந்த அவரது தாய், தனது மகளை எய்ம்ஸ் மருத்துவமனையில் சேர்த்தார். தகவலறிந்த போலீசாரும், பாதிக்கப்பட்ட பெண்ணிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.