கடந்த 2014 ஆம் ஆண்டில் உக்ரைனுக்கு சொந்தமான கிரிமியா தீபகற்பத்தை ரஷ்யா ஆக்கிரமித்தது. இதையடுத்து உக்ரைன் எல்லை பகுதியில் ரஷ்யா ராணுவ படைகளை குவித்து வந்ததால் எப்போது வேண்டுமானாலும் போர் வெடிக்கும் சூழல் நிலவி வந்த நிலையில், உக்ரைன் மீது போர் தொடுக்க ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் உத்தரவிட்டார். அதன்படி கடந்த வியாழக்கிழமை அன்று உக்ரைன் மீது ஆக்ரோஷமான போரைத் தொடங்கிய ரஷ்யா 6-வது நாளாக தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருகிறது. மேலும் உக்ரைனின் இரண்டாவது பெரிய நகரமான கார்கீவில் ரஷ்யா-உக்ரைன் படைகள் இடையே கடுமையான மோதல் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் ரஷ்யா போரில் இருந்து பின்வாங்கப் போவதில்லை என்று ரஷ்ய பாதுகாப்புத் துறை அமைச்சர் ஷோய்கு திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். மேற்கு நாடுகளின் அச்சுறுத்தலில் இருந்து ரஷ்யாவை பாதுகாப்பதற்கான இலக்கை அடையும் வரை உக்ரைன் மீது போர் தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து உக்ரைன் மீது ரஷ்யா 120 மணி நேரத்திற்கு மேலாக இடைவெளி இன்றி நடத்தி வரும் தாக்குதலால் 350-க்கும் மேற்பட்ட அப்பாவி மக்கள் உயிரிழந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது.