திருச்சியை அடுத்த திருவெறும்பூர் அருகே உள்ள பகவதிபுரத்தில் சுந்தர் என்ற மீனாட்சி சுந்தர் (28) வசித்து வருகிறார். இவர் பர்மா காலனியை சேர்ந்த வடை கடை வியாபாரி ராமன் என்பவரிடம் 4 லட்சம் கடன் பெற்றுள்ளார். இந்நிலையில் ராமன் அந்த கடனை திருப்பி கேட்ட போது சுந்தர் கொடுக்கவில்லை. இதனால் அவர்கள் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதனையடுத்து ராமன் தன்னுடைய கடையில் இரவு நேரத்தில் சிக்கன் 65 செய்து அதில் கிடைக்கும் வருமானத்தை வைத்து தன்னுடைய கடனை அடைக்குமாறு சுந்தரிடம் தெரிவித்துள்ளார். அதனால் சுந்தரும் ராமன் கடையில் சிக்கன் 65 வியாபாரம் பார்த்து வந்ததாக கூறப்படுகிறது. இருப்பினும் சுந்தரால் ராமனின் கடனை அடைக்க முடியவில்லை.
இதனால் ராமன் சுந்தரை தனியாக அழைத்துக் கொண்டு பாலாஜி நகர் கவுற்று வாய்க்கால் பாலம் பகுதிக்கு சென்றுள்ளார். அங்கு சுந்தருக்கு ராமன் மது வாங்கி கொடுத்து போதை அதிகமாகியவுடன் சுந்தரின் கை, கால்களை கயிற்றால் கட்டி ஏற்கனவே புதிதாக வாங்கி வைத்திருந்த கத்தியால் சுந்தரின் கழுத்தை அறுத்துள்ளார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். பின்னர் ராமன் திருவெறும்பூர் போலீஸ் நிலையத்தில் சரணடைந்து சுந்தரை கொலை செய்ததை கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சுந்தரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் ராமனை கைது செய்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.