ரிசர்வ்வங்கியின் ஆளுநரான சக்திகாந்ததாஸ் தலைமையில் இன்று ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இந்த கூட்டம் துவங்குவதற்கு முன்னதாகவே ரெப்போவட்டி விகிதமானது அதிகரிக்கப்படும் என்ற கருத்து பரவலாகயிருந்தது. ஏனென்றால் இந்தியாவில் தற்போது பணவீக்கம் பிரச்சினை உயர்ந்திருப்பதால் ரெப்போவட்டியை அதிகரிக்க வேண்டிய அவசியம் உள்ளதாக நிபுணர்கள் தெரிவித்தனர். அதன்படி ஆலோசனை கூட்டத்தில் ரெப்போவட்டி விகிதமானது 0.50 சதவீதம் அதிகரிக்கப்பட்டு உள்ளது. புது மாற்றத்தின் அடிப்படையில் இந்த வட்டி விகிதம் 4.90 சதவீதம் ஆக அதிகரித்துள்ளது.
இந்த வட்டி உயர்வைத் அடுத்து வங்கிகள் பொதுமக்களுக்கு வழங்கும் பல கடன்களுக்கான வட்டியும் அதிகரிக்கும். அதிலும் குறிப்பாக வீட்டுக் கடன் வாங்குவோர் இனிமேல் அதிகமான ஈஎம்ஐ மற்றும் வட்டி செலுத்த வேண்டி இருக்கும். உதாரணமாக நீங்கள் ஒரு வங்கியில் 6.5 % வட்டியில் ரூபாய் 10 லட்சம் வீட்டுக்கடன் வாங்கியதாக வைத்துக்கொள்வோம். மொத்தம் 20 வருடங்களில் இக்கடனை ஈஎம்ஐ முறையில் செலுத்தவேண்டும். ஈஎம்ஐ தொகை ரூபாய் 7500 ஆகும். அந்த வகையில் பார்த்தால் நீங்கள் வட்டி மட்டுமே மொத்தம் ரூபாய் 7.90 லட்சம் செலுத்த வேண்டி இருக்கும்.
அதாவது 20 வருடங்களில் நீங்கள் செலுத்தவேண்டிய மொத்தத் தொகை ரூபாய் 17.90 லட்சம் ஆகும். தற்போது ரெப்போவட்டி அதிகரிக்கப்பட்ட பின், வங்கிகளின் வீட்டுக்கடன் வட்டி 7 சதவீதம் ஆக உயரும். அந்த அடிப்படையில் பார்த்தால் நீங்கள் 20 வருடங்களில் செலுத்தவேண்டிய மொத்தத் தொகை ரூபாய் 18.60 லட்சம் ஆகும். இதற்கு முன்னதாக இருந்த ஈஎம்ஐக்கும் தற்போதைய ஈஎம்ஐக்கும் உள்ள வித்தியாசம் மாதத்திற்கு ரூபாய் 297 ஆகும். அதேபோன்று 20 வருடங்களில் 2 வட்டிக்கும் உள்ள வித்தியாசத்தின் படி நீங்கள் செலுத்தும் மொத்தத் தொகையில் ரூபாய் 70,717 அதிகமாக செலுத்த வேண்டி இருக்கும்.