கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட கொங்கு திருமன மண்டபம் சாலையில் இருந்து ராமானுஜர் நகர் வரை வடிகால் கழிவு நீர் வடிகால் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதற்கான பணிகளை அமைச்சர் செந்தில் பாலாஜி தொடங்கி வைத்தார். இந்நிலையில் 29வது வார்டு பகுதி மகாலட்சுமி நகர் பக்கத்தில் கழிவுநீர் வடிகால் கட்டும் பணி கடந்த 25 நாட்களுக்கு முன்புதான் நிறைவடைந்த நிலையில் கரூர் மற்றும் அதனுடைய சுற்றுவட்டாரப் பகுதிகளில் விட்டு விட்டு மழை பெய்து வந்தது.
இதனையடுத்து வெள்ளிக்கிழமை மாலை பெய்த மழையில் மகாலட்சுமி நகரப் பகுதிகளில் புதிதாக கட்டப்பட்ட கழிவுநீர் வடிகால் தடுப்புச்சுவர் ஆனது சுமார் 150 அடி வரை இடிந்து விழுந்துள்ளது. இதனால் இதை கண்ட அப்பகுதி மக்கள் பெரும் அதிர்ச்சி அடைந்து மாநகராட்சி அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளனர். மேலும் அப்பகுதி மக்கள் கழிவுநீர் வடிகால் அமைக்கும் பணியை ஒப்பந்ததாரர் தரமில்லாமல் கட்டியதாகவும் தடுப்புச் சுவருக்கு இரும்பு கம்பிகளை கொண்டு கான்கிரீட் போடாமல் பெயரளவிற்கு செங்கல் மற்றும் தரமற்ற சிமெண்ட் விலை கொண்டு கட்டியதால் கழிவுநீர் வடிகால் சுவர் இடிந்து விழுந்ததாக தெரிவித்துள்ளனர்.
மேலும் அனைத்து விஷயங்களிலும் சுறுசுறுப்பாகச் செயல்படும் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி இந்த பணியை முறையாக கண்காணித்து இருந்தால் இதுபோன்ற நடந்திருக்காது என்று கூறி அப்பகுதி மக்கள் ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.