தெலுங்கானா மாநிலம் குண்டூர் மாவட்டம் மங்களகிரி அருகேயுள்ள கண்டலாயபேட் பகுதியில் மனோஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு முன்பே 2 பெண் குழந்தைகள் இருக்கும் நிலையில், கடந்த 3 மாதங்களுக்கு முன்பு இவரது மனைவிக்கு 3-வதாக பெண் குழந்தை பிறந்தது. இதன் காரணமாக மூன்று மகள்களையும் எப்படி வளர்க்க போகிறோமோ?.. என்று மனோஜ் அச்சத்தில் இருந்தார். இதனால் 3 மாத குழந்தையை மனோஜ் விற்க முடிவுசெய்தார். இது குறித்து அவர் தனது மனைவியிடம் பேசியபோது முதலில்அவரும் சம்மதம் தெரிவித்தார்.
இதையடுத்து சில தினங்களில் மனைவி மனம் மாறினார். பின் பெற்ற குழந்தையை விட்டுக் கொடுக்க மறுத்த போதிலும் மனைவியின் எதிர்ப்பை மீறி காயத்திரி என்ற புரோக்கர் வாயிலாக மனோஜ் தனது 3 மாத பெண் குழந்தையை 70 ஆயிரம் ரூபாய்க்கு விற்றார். அதன்பின் காயத்திரி குழந்தை இல்லாத தம்பதிக்கு அந்த குழந்தையை விற்பனை செய்வதற்கான நடவடிக்கையில் இறங்கினார். அதன்படி நலகொண்டா மாவட்டத்திலுள்ள பால்கெட் கண்டபிரலுபகுதியில் வசித்து வரும் பாக்யாநந்து என்பவரிடம் 1,20,000 ரூபாய்க்கு குழந்தையை விற்று விட்டார்.
அதன்பின் பாக்யாநந்து தன் உறவினர் உதவியுடன் ஐதராபாத்தில் சுக் பகுதியை சேர்ந்த நூர்ஜகான் என்ற பெண்ணிடம் 1,87,000 ரூபாய்க்கு விற்பனை செய்தார். அதனை தொடர்ந்து அந்த குழந்தை ஐதராபாத் ஆரியன்னகுடாவுக்கும், விஜயவாடா பென்ஸ் சர்க்கிளுக்கும், விஜயவாடா குல்லபுடி பகுதிகளை சேர்ந்தவர்களுக்கும் மாறி, மாறி விற்கப்பட்டது. இதனால் லட்சக் கணக்கில் பணம் கைமாறியது. இறுதியில் அந்த குழந்தை ஆந்திரா மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டம் எல்லுரு என்ற இடத்தை சேர்ந்த விஜயலட்சுமி என்ற பெண்ணிடம் ரூபாய் 2 லட்சத்து 50 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்பட்டது.
இது குறித்து மனோஜ் மனைவி போலீஸ் சூப்பிரண்டு ராம்பாபுவிடம் புகார் கொடுத்தார். அதன்பின் அக்குழந்தையை மீட்பதற்கு அவர் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டு, இதற்காக அவர் தனிப்படை அமைத்தார். இந்நிலையில் தனிப்படையினர் முதலில் மனோஜிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது விசரணையில் கடந்த 2 மாதத்தில் பச்சிளம் குழந்தை மங்கள கிரியிலிருந்து மேற்கு கோதாவரி வரை சங்கிலி தொடர் போல் அடுத்தடுத்து 7 தடவை கைமாறி பலரிடம் விற்பனை செய்யப்பட்ட திடுக்கிடும் தகவல் வெளியாகியது. இந்த சம்பவம் குறித்து குழந்தையின் தந்தை மனோஜ் உள்பட 11 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.
அத்துடன் குழந்தையை பாதுகாப்பாக மீட்டு தாயிடம் ஒப்படைத்தனர். அதுமட்டுமின்றி விசாரணையின்போது ஒருபெரிய குழந்தைவிற்பனை கும்பல் இதில் செயல்பட்டு வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. அவர்கள் மருத்துவமனைகளில் குழந்தை பெற்றெடுக்கும் பெண்களிடம் அவர்களது வறுமையை பயன்படுத்தி குழந்தைகளை விலைக்கு வாங்கி குழந்தை பாக்கியம் இன்றி இருக்கும் தம்பதிகளுக்கு விற்பனைசெய்து வந்தனர். ஆனால் இதுவரையிலும் மொத்தம் எத்தனை குழந்தைகள் விற்பனையாகி உள்ளது என்பது குறித்து காவல்துறையினர் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.