ஆழ்துளை கிணற்றில் சிக்கிய சிறுவனை 24 மணி நேர தொடர் போராட்டத்திற்கு பின் பேரிடர் மீட்பு குழுவினரால் உயிருடன் மீட்கப்பட்டான்.
ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள சிகார் மாவட்டத்தை சேர்ந்த குட்டு என்ற 4 வயது சிறுவன், அந்த பகுதியில் விளையாடிக் கொண்டிருக்கும்போது அங்குள்ள 50 அடி ஆழ்துளை கிணற்றில் விழுந்துள்ளான். இது குறித்து தகவலறிந்த பேரிடர் மீட்புக் குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சிறுவனை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இதனை அடுத்து அந்த சிறுவனுக்கு ஆக்ஸிஜன் வழங்கப்பட்டு,பின் கேமராவை ஆழ்துளை கிணற்றுக்குள் அனுப்பி சிறுவனின் நிலையைத் தொடர்ந்து கண்காணித்து வந்தனர்.
இதற்கிடையில் சுரங்கப்பாதை ஒன்றை ஆழ்துளை கிணற்றுக்கு அருகில் அமைத்தனர். பின்னர் பேரிடர் மீட்பு குழுவினரின் முயற்சியால் 24 மணிநேர போராட்டத்திற்கு பின் சுரங்கப்பாதை வழியாக சென்று சிறுவனை உயிரோடு மீட்டுள்ளனர். இதையடுத்து மீட்கப்பட்ட சிறுவனுக்கு முதலுதவி சிகிச்சை அளித்து மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். இந்நிலையில் சிகிச்சை பெற்று வரும் சிறுவன் நலமுடன் உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.