தெலுங்கானா மாநிலத்தில் உள்ள சிர்சில்லா மாவட்டம் ராஜண்ணா பகுதியில் ஒரு பெண்ணை வீடு புகுந்து மர்ம நபர்கள் சிலர் கடத்தியுள்ளனர். இதுகுறித்து பெண்ணின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் கடத்தப்பட்ட பெண் திருப்பதியில் மாலையும், கழுத்துமாக நின்று ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதாவது கடத்தப்பட்ட பெண்ணின் பெயர் ஷாலினி. இவர் இதே பகுதியைச் சேர்ந்த ஜானி என்பவரை காதலித்து வந்த நிலையில், கடந்த ஒரு வருடத்திற்கு முன்பாக இருவரும் வீட்டை விட்டு வெளியேறியுள்ளனர். இது குறித்து பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் காவல்துறையினர் ஜானி மற்றும் ஷாலினியை கண்டுபிடித்தனர்.
அப்போது ஷாலினி மைனர் என்பதால் ஜானி மீது போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில் ஷாலினிக்கு தற்போது வீட்டில் வேறு ஒருவருடன் திருமண நிச்சயதார்த்தம் செய்துள்ளனர். இதனால் தான் ஜானி ஷாலினியை வீடு புகுந்து கடத்தியுள்ளார். அதிகாலை நேரத்தில் ஜானி முகமூடி அணிந்திருந்ததால் அவரை எனக்கு அடையாளம் காண முடியவில்லை என ஷாலினி கூறியுள்ளார். அதோடு நான் தற்போது ஜானியை திருமணம் செய்து கொண்டு மகிழ்ச்சியாகவும், நலமாகவும் இருக்கிறேன். எங்களுடைய காதல் திருமணத்திற்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் இப்படி ஒரு முடிவை எடுத்ததாக ஷாலினி தெரிவித்துள்ளார். மேலும் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.