மலையாள சினிமாவில் பிரபலமான நடிகராகவும், தயாரிப்பாளராகவும், விநியோகஸ்தர் ஆகவும் வலம் வருபவர் பிரித்திவிராஜ். இவருடைய வீடு மற்றும் அவருக்கு சொந்தமான இடங்களில் கடந்த வியாழக்கிழமை வருமானவரித்துறை சோதனை நடைபெற்றுள்ளது. இதேபோன்று பிரித்திவிராஜ் மற்றும் நடிகர் மோகன்லால் படங்களை தொடர்ந்து தயாரிக்கும் தயாரிப்பாளர் ஆண்டனி பெரும்பாவூர், மம்முட்டியின் படங்களை தொடர்ந்து தயாரிக்கும் ஆன்டோ ஜோசப் மற்றும் தயாரிப்பாளர் மேஜிக் பிரேம்ஸ் லிஸ்டின் ஸ்டீபன் ஆகியோரது வீடுகள் மற்றும் அவர்களுக்கு சொந்தமான இடங்கள் என மொத்தம் 50 இடங்களில் வருமானவரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தியுள்ளனர்.
கடந்த வியாழக்கிழமை காலை 7:30 மணிக்கு தொடங்கிய வருமானவரித்துறை ரெய்டு மாலை 4:30 மணி அளவில் முடிவடைந்துள்ளது. இந்த சோதனை கேரளாவில் மட்டுமின்றி சென்னை மற்றும் மும்பை போன்ற இடங்களில் மேற்கண்ட தயாரிப்பாளர்களுக்கு சொந்தமான இடங்களிலும் நடைபெற்றுள்ளது. இந்த சோதனையின் போது பல டிஜிட்டல் ஆவணங்களை வருமான வரித்துறையினர் எடுத்துச் சென்றதாக கூறப்படுகிறது. மேலும் இந்த சம்பவம் மலையாள திரை உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.