தமிழகத்தில் கொரோனாவிற்கு பிறகு அடுத்து தாக்குதலாக ஒமைக்ரான் பரவல் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இதனால் மக்கள் மத்தியில் கடும் அச்சம் நிலவி வருகிறது. இதனையடுத்து ஒமைக்ரான் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக பல கட்டுப்பாடுகளை அனைத்து மாவட்ட நிர்வாகங்களும் அறிவித்துள்ளது. அதன்படி தமிழகத்தில் விமான நிலையங்களில் வெளிநாடுகளில் இருந்து சென்னைக்கு வரும் விமான பயணிகளுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.
ஒமைக்ரான் அச்சுறுத்தலை தொடர்ந்து முகக்கவசம் அணியாதவர்க்ளுக்கும், நோய் தடுப்பு விதிகளை கடைபிடிக்காதவர்களுக்கும் கடுமையான அபராதம் விதிக்க அதிகாரிகளுக்கு சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் தமிழக -கேரள எல்லை சோதனைச்சாவடியான களியக்காவிளையில் கேரளாவில் இருந்து வரும் வாகனங்களில் வருவோர் இ-பாஸ் மற்றும் இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றிதழை காண்பித்த பிறகு அனுமதிக்கப்படுகின்றனர். தடுப்பூசி போடாதவர்களுக்கு ஆர்டிபிசிஆர் சோதனை சான்றிதழ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.