தமிழகத்தில் கொரோனாவிற்கு பிறகு அடுத்து தாக்குதலாக ஒமைக்ரான் பரவல் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இதனால் மக்கள் மத்தியில் கடும் அச்சம் நிலவி வருகிறது. இதனையடுத்து ஒமைக்ரான் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக பல கட்டுப்பாடுகளை அனைத்து மாவட்ட நிர்வாகங்களும் அறிவித்துள்ளது. அதன்படி தமிழகத்தில் விமான நிலையங்களில் வெளிநாடுகளில் இருந்து சென்னைக்கு வரும் விமான பயணிகளுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.
ஒமைக்ரான் அச்சுறுத்தலை தொடர்ந்து முகக்கவசம் அணியாதவர்க்ளுக்கும், நோய் தடுப்பு விதிகளை கடைபிடிக்காதவர்களுக்கும் கடுமையான அபராதம் விதிக்க அதிகாரிகளுக்கு சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது. வெளிநாடுகளில் இருந்து வருவோரில் அறிகுறி இருப்போரை பரிசோதனை செய்து தனிமைப்படுத்த வேண்டும். மாநிலத்துக்குள்ளும் மருத்துவ கண்காணிப்புகளை தீவிரப்படுத்த வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் ஒமைக்ரான் காரணமாக தமிழகத்தில் புத்தாண்டு கொண்டாட்டங்களை ஒட்டி மீண்டும் கட்டுப்பாடுகள் அதிகப்படுத்தப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஏற்கனவே புத்தாண்டை ஒட்டி மூன்று நாட்கள் கடற்கரைக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஜனவரியில் ஒமைக்ரான் அலை உருவாக வாய்ப்புள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளதையடுத்து அடுத்து புதிதாக சில ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்க அரசு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.