நாடு முழுவதும் கொரோனாவிற்கு பிறகு அடுத்து தாக்குதலாக ஒமைக்ரான் பரவல் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இதனால் மக்கள் மத்தியில் கடும் அச்சம் நிலவி வருகிறது. இதனையடுத்து ஒமைக்ரான் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக பல கட்டுப்பாடுகளை அனைத்து மாநில அரசுகளும் அறிவித்துள்ளது. மேலும் ஒமைக்ரான் தொற்று அதிகரிக்கும் பகுதிகளில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தலாம் என்று அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய சுகாதாரத்துறை கடிதம் மூலம் தெரிவித்துள்ளது.
அந்த வகையில் ஒருசில மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஒமைக்ரான் பரவலை கட்டுப்படுத்த அசாம் மாநிலத்தில் நாளை முதல் இரவு ஊரடங்கு அமல்படுத்தப் படுவதாக மாநில அரசு அறிவித்துள்ளது. அதன்படி நாளை முதல் இரவு 11.30 மணி முதல் காலை 6 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமலில் இருக்கும். திரையரங்குகளில் 50 சதவீதம் பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதி. டிசம்பர் 31ம் தேதி மட்டும் புத்தாண்டு கொண்டாட்டம் காரணமாக இரவு நேர ஊரடங்கு அமலில் இருக்காது என்று தெரிவித்துள்ளது.