உருமாறிய கொரோனா தொற்றான ஒமைக்ரான் தென்னாப்பிரிக்காவில் முதல் முதலாக கண்டறியப்பட்டது. இந்த தொற்று தற்போது ஐரோப்பிய நாடுகளை உலுக்க தொடங்கியிருக்கிறது. ஒமைக்ரான் தொற்று வேகமாக பரவினாலும் அதன் பாதிப்புகள் தீவிரமாக இருக்காது என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இருந்தாலும் இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளில் வைரஸ் பரவும் வேகம் மிக வேகமாக இருக்கிறது. இதனால் இந்தியாவில் அதே வேகத்தில் பரவினால், தினசரி 14,00,000 பேர் வரை பாதிக்கப்படுவார்கள் என மருத்துவ வல்லுநர்கள் தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில் எய்ம்ஸ் இயக்குனர் மருத்துவர் ரன்தீப் குலேரியா நேற்று அளித்த பேட்டியில், ஒமைக்ரான் தொற்று பிரிட்டனிலும் அதிகரித்து வருவது வேதனையை ஏற்படுத்தியுள்ளது. நாம் எந்த சூழலையும் எதிர்கொள்ள தயாராக இருக்கவேண்டும். ஆனால் பிரிட்டனில் சூழல் மோசமான அளவுக்கு செல்லாது என்று நம்புகிறேன். நமக்கு தொற்று பற்றி அதிகமான புள்ளிவிபரங்கள் தேவைப்படுகிறது. உலகில் மற்ற நாடுகளிலும் தொடர்ந்து நாம் கண்காணிப்பது அவசியம். எதற்கும் தயாராக இருப்போம் அதே சமயத்தில் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளையும் கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.