ஜனவரி 3 ஆம் தேதி முதல் 15 முதல் 18 வயதினருக்கு தடுப்பூசி செலுத்தப்படும் என்று அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
சென்னை, மடுவங்கரை பகுதியில் நடைபெற்ற 16ஆவது தடுப்பூசி முகாமை மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் திறந்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் தெரிவித்துள்ளதாவது: “தமிழகத்தில் இதுவரை 8.14 கோடி கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது. முதல் தவணை தடுப்பூசி 84.87% பேருக்கும், 2-ம் தவணை தடுப்பூசி 55.85% பேருக்கும் செலுத்தப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே கர்ப்பிணிகளுக்கு அதிக தடுப்பூசி செலுத்தப்பட்ட மாநிலங்களில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது.
மத்திய அரசின் உத்தரவின் பெயரில், ஜனவரி 3-ம் தேதி முதல் 15 – 18 வயதினருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கப்படும். முதலில் சென்னை சைதாப்பேட்டையில் உள்ள பெண்கள் மாநகராட்சி பள்ளியில் இந்த பணி தொடங்கப்படும். ஜனவரி 10-ம் தேதி முதல் 9.78 லட்ச முன்களப்பணியாளர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடங்கப்படும். 15-18 வயதை சேர்ந்த சுமார் 33 லட்சம் பேர் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள தகுதியானவர்கள். 60- வயதை கடந்த 1.04 கோடி பேர் பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக்கொள்ள தகுதியானவர்கள். தடுப்பு நடவடிக்கை பற்றி ஆய்வு செய்ய 4 பேர் கொண்ட மத்தியக்குழு இன்று சென்னை வருகின்றனர். மத்திய அரசின் அறிவுறுத்தலின் படி தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது” என்று அவர் கூறினார்.