தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட புதிய ஒமைக்ரான் வகை கொரோனா வைரஸ் பல்வேறு நாடுகளில் பரவி வரும் நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சோதனைகளை அதிகப்படுத்துவது உட்பட அறிவுரைகளை மாநில அரசுகளுக்கு மத்திய அரசு வழங்கியுள்ளது. தென் ஆப்பிரிக்காவில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒமைக்ரான் வைரஸ் கண்டறியப்பட்டது. இதையடுத்து பல்வேறு நாடுகளும் மீண்டும் கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்த தொடங்கியுள்ளது. இந்த வைரஸ் மிகவும் ஆபத்தான பிரிவில் வகைப்படுத்தப்பட்டுள்ளது.
இது 30 முறைக்கு மேலாக உருமாற்றம் அடைந்து இருக்கிறது. தென் ஆப்பிரிக்காவில் இருந்து பெங்களூர் வந்த பயணிகளுக்கு கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்ட நிலையில், கர்நாடக மாநிலத்திலும் கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் மத்திய சுகாதார செயலாளர் ராஜேஷ் பூஷன், அனைத்து மாநிலங்களுக்கும் கொரோனா ஒமைக்ரான் மாறுபாடு குறித்து கடிதம் எழுதியுள்ளார். அதில், தீவிர கட்டுப்பாடு மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகளை அமல்படுத்த வேண்டும் என்றும் தடுப்பூசி செலுத்துவதை மேலும் அதிகரிக்கவும் கேட்டுக்கொண்டுள்ளார்.இந்த மாறுபட்ட வைரஸ் கண்டறியப்பட்ட பகுதிகளிலிருந்து வரும் சர்வதேச பயணிகளை கடுமையாக கண்காணிக்குமாறு மாநிலங்களுக்கு அவர் அறிவுறுத்தியுள்ளார்.