ஒமிக்ரான் தொற்று பற்றி பயம் கொள்ள தேவையில்லை என்று தென்னாப்பிரிக்காவின் மருத்துவ சங்கத் தலைவர் கூறியிருக்கிறார்.
தென் ஆப்பிரிக்காவில் கடந்த மாதம் 24ஆம் தேதியன்று ஓமிக்ரான் என்ற புதிய வகை கொரோனா மாறுபாடு கண்டறியப்பட்டது. இது உலக நாடுகளில் அச்சறுத்தலை ஏற்படுத்தியது. எனவே, அந்நாடுகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த வைரஸ் அதிகமாக பரவுமா? அல்லது அதிக பாதிப்புகளை ஏற்படுத்துமா? என்பது தொடர்பில் விஞ்ஞானிகள் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்கள். இந்நிலையில் தென்னாபிரிக்காவின் மருத்துவ சங்க தலைவரான ஏஞ்சலிக் கோட்சி தெரிவித்திருப்பதாவது, தற்போது தடுப்பூசிகள் நோய்த் தொற்றிலிருந்து நம்மை பாதுகாக்கும் என்பது தெரிந்த விஷயம்.
தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களுக்கு சிறிய அளவில் தான் அறிகுறிகள் ஏற்படுகிறது. மேலும் இந்த வைரஸ் ஆரம்பத்தில், டெல்டா மாறுபாட்டை காட்டிலும் குறைவான பாதிப்பை தான் கொண்டிருந்தது. எனினும் வரும் நாட்களில் தான் அதன் வீரியம் தொடர்பில் தெரியவரும். மருத்துவமனைகளில் சேர்க்கப்படும் நோயாளிகள் எண்ணிக்கை தற்போது குறைந்திருக்கிறது.
ஓமிக்ரான் தொற்று ஏற்பட்டவர்களுக்கு, உடல் சோர்வு, உடல் வலி மற்றும் கடும் தலைவலி ஏற்பட்டிருக்கிறது. ஆனால், கொரோனா வைரஸிற்கான பிற அறிகுறிகள் எவருக்கும் ஏற்படவில்லை. எனவே, ஓமிக்ரான் குறித்து அதிகம் பயப்பட தேவையில்லை என்று கூறியிருக்கிறார்.