தற்போது 77-க்கும் மேற்பட்ட நாடுகளில் கண்டறியப்பட்டுள்ள ஒமிக்ரான் வைரஸ் பாதிப்புகள் இன்னும் பெரும்பாலான நாடுகளில் பரவி இருக்கலாம் என்று உலக சுகாதார அமைப்பின் தலைவர் பெட்ரோஸ் தெரிவித்துள்ளார்.
கொரோனாவில் இருந்து உருமாறிய ஒமிக்ரான் வைரஸ் தற்போது 77 நாடுகளை தாக்கி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அந்த வகையில் இந்தியாவிலும் கர்நாடக மாநிலத்தில் கண்டறியப்பட்ட இந்த ஒமிக்ரான் வைரஸ் தற்போது 61 பேருக்கு உறுதியாகியுள்ளது. ஏற்கனவே இந்த வைரஸ் வேகமாக பரவக்கூடியது என்று கணிக்கப்பட்டுள்ள நிலையில், இது இந்தியாவில் 3-ம் அலையை ஏற்படுத்துமா என்ற கேள்வி மக்களிடம் பெறப்பட்டது. இந்த ஒமிக்ரான் வைரஸ் மேலும் பல நாடுகளை ஆக்கிரமித்து இருக்கும் என உலக சுகாதார அமைப்பின் தலைவர் பெட்ரோஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பெட்ரோஸ் செய்தியாளர்களிடம் பேசியதாவது “ஒமிக்ரான் வைரஸ் இதுவரை இல்லாத அளவுக்கு அதிவேகமாக பரவி வருகிறது.
அதனால் ஒமிக்ரான் வைரசை லேசானது என்று நாடுகள் நிராகரிக்ககூடாது. அதுமட்டுமின்றி ஒமிக்ரான் வைரஸ் லேசாக நோயை ஏற்படுத்துவதாக மக்கள் கருதுவது தவறு என்றும் ஆயத்தம் இல்லாத சுகாதார அமைப்புகளை இது அமிழ்த்தி விடும் என்றும் குறிப்பிட்டுள்ளார். இதனிடையில் ஒமிக்ரானின் தோற்றம் சில நாடுகளில் பயன்படுத்தப்பட்டு வரும் தடுப்பூசிகளுக்கு அப்பாற்பட்டதாக இருக்கிறது. எனினும் பூஸ்டர்கள் ஒமிக்ரான் வைரசுக்கு எதிராக ஒரு முக்கிய பங்கை வகிக்கும். அதிலும் குறிப்பாக கடுமையான நோய் இறப்பு அபாயத்தில் உள்ளவர்களுக்கு இது பயன்படும்” என்று கூறினார்.
இதற்கு முன்பு ஒமிக்ரான் வைரஸ் தொடர்பாக மருத்துவமனையில் அனுமதிக்கப்படுபவர்கள் மற்றும் இறப்பு எண்ணிக்கையில் அதிகரிப்பு எதிர்பார்க்கப்படுவதாக உலக சுகாதார நிறுவனம் கூறியது. அதன்படி ஒமிக்ரான் வைரசின் அம்சங்களை உலக சுகாதார நிறுவனம் கடந்த வாரம் வெளியிட்டுள்ளது. இதனால் அது எந்த அளவிற்கு பரவும் என்பதும், இந்த புதிய மாறுபாடு தொற்று நோயின் போக்கில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்றும் உலக சுகாதார நிறுவனம் பரிந்துரைத்துள்ளது. ஆனால் இதுகுறித்த உறுதியான தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை. எனினும் மற்ற கொரோனா வைரஸ் வகைகளுடன் ஒப்பிடும்போது ஒமிக்ரான் வைரசின் சரியான அதிகரிப்பு விகிதத்தைக் கணக்கிடுவது கடினமானது என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.