தற்போது உள்ள எங்கள் தடுப்பூசியிலிருந்து ஒமிக்ரான் வைரஸ் தப்பிக்க முடியுமா என்று தெரியவில்லை என பைசர் நிறுவனம் தெரிவித்துள்ளது.
தென் ஆப்பிரிக்காவில் உருமாறிய புதிய வகையான ஒமிக்ரான் கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. இந்த புதிய வகை கொரோனாவுக்கு எதிராக தடுப்பூசியின் செயல்திறன் குறைவு என கூறப்படுகிறது. மேலும் இந்த வகை கொரோனாவை உலக சுகாதார அமைப்பும் கவலைக்குரிய திரிபாக வரிசைப்படுத்தி உள்ளது. இந்நிலையில் இந்த வைரஸ் தென் ஆப்பிரிக்காவை தவிர்த்து ஹாங்காங், போட்ஸ்வானா, இஸ்ரேல் போன்ற நாடுகளிலும் கால் பதித்துள்ளது. இதுவரையிலும் 60 பேரை இந்த கொரோனா வைரஸ் பாதித்து உள்ளது. இதனிடையில் ஒமிக்ரான் வைரஸ் அச்சுறுத்தலால் உலக நாடுகள் பல பயணக் கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றது.
அதேபோன்று இந்தியாவும், தென் ஆப்பிரிக்காவில் இருந்து வரும் பயணிகளை தீவிரமாக கண்காணிக்கும் நடவடிக்கையில் இறங்கி உள்ளது. இதற்கு இடையில் தற்போது உள்ள தடுப்பூசிகள் புதியவகை ஒமிக்ரான் ரக கொரோனா வைரசிலிருந்து பாதுகாக்குமா என்பது குறித்து அந்தந்த நிறுவனங்கள் தீவிர ஆராய்ச்சியில் இறங்கி உள்ளது. இதுகுறித்து பைசர் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் “இந்த வைரஸ் தற்போது உள்ள எங்களின் தடுப்பூசியிலிருந்து தப்பிக்க முடியுமா என்று இதுவரை தெரியவில்லை. ஆனால் இந்த வைரசுக்கு எதிராக 100 தினங்களில் புதிய கொரோனா தடுப்பூசியை தயாரித்து அனுப்புவோம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.