மதுரை அரசு மருத்துவமனையில் ஒமிக்ரான் வைரஸ் தொற்றுக்கு சிகிச்சை அளிப்பதற்கு புதிதாக வார்டு அமைக்கப்பட்டு உள்ளது.
கொரோனாவில் இருந்து உருமாறிய ஒமிக்ரான் வைரஸ் பல நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இதனால் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி ஒமிக்ரான் பாதிப்புள்ள நாடுகளில் இருந்து இந்தியா வருபவர்கள் தீவிரமாக கண்காணிக்கப்படுகின்றனர். இதேபோன்று எந்த ஒரு வெளிநாட்டில் இருந்தும் தமிழகம் வரும் பயணிகளுக்கு விமான நிலையத்திலேயே வைத்து கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. அப்போது பாதிப்பு உறுதி செய்யப்பட்டால் அவர்களுக்கு உடனடியாக மருத்துவ சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதனையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மதுரை அரசு மருத்துவமனையின் ரத்த வங்கி அருகே இயங்கி வரும் கொரோனா வார்டு எதிரில் ஒமிக்ரான் சிறப்பு வார்டு தொடங்கப்பட்டுள்ளது.
அந்த வார்டில் நோயாளிகள் சிகிச்சை பெறும் வகையில் மருத்துவ கருவிகள் மற்றும் படுக்கைகள் அமைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மருத்துவத்துறை அதிகாரிகள் கூறியதாவது “ஒமிக்ரான் வைரஸ் பரவல் அதிகமாக இருப்பதால் தென் மாவட்டத்தில் முதன் முறையாக மதுரையில் புதிதாக வார்டு தொடங்கப்பட்டுள்ளது. அந்த வார்டில் அவசர சிகிச்சை பிரிவில் இருப்பதுபோல் அனைத்து விதமான கருவிகளும் உள்ளது. அங்கு 30 படுக்கை வசதிகளும் அமைக்கப்பட்டுள்ளது. இதனிடையில் விமான நிலையத்தில் பயணிகளுக்கு மேற்கொள்ளப்படும் பரிசோதனையில் பாசிட்டிவ் என வரும் நபர்களுக்கு இந்த வார்டில் வைத்து சிகிச்சை அளிப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
ஆனால் ஏற்கனவே கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுடன் புதிதாக ஒமிக்ரான் தொற்று உறுதி செய்யப்படுபவர்களை சேர்த்து சிகிச்சை அளிக்க முடியாது. அதனால்தான் புதிதாக வார்டு தொடங்கப்பட்டுள்ளது. இவ்வாறு நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் அதற்கான பணியாளர்களும் நியமனம் செய்ய இருக்கின்றனர். இதற்கிடையில் ஒமிக்ரான் வைரஸ் தமிழ்நாட்டில் கால் பதிக்க கூடாது என மருத்துவத்துறை வேண்டி கொள்கின்றனர். எனினும் அதனை எதிர்கொள்ள மருத்துவத்துறை தயார் நிலையில் இருப்பதோடு அதற்கான ஆயத்த பணிகளை செய்து வருகின்றனர். பொதுமக்கள் எந்த வகை புதிய வைரசில் இருந்தும் தப்பிக்க தடுப்பூசி செலுத்த வேண்டும். அதேபோன்று பொது இடங்களுக்கு செல்லும்போது மக்கள் கண்டிப்பாக முககவசம் அணிய வேண்டும்” என்று கூறினர்.