அரசின் வழிகாட்டுதல் நெறிமுறைகளுக்கு பிறகே ஆம்னி பேருந்து கட்டண உயர்வு பற்றி முடிவெடுக்கப்படும் என அன்பழகன் தெரிவித்துள்ளார்.
தற்போது ஆம்னி பேருந்தில் எவ்வித கட்டண உயர்வும் இல்லை என ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்க பொதுச்செயலாளர் அன்பழகன் தெரிவித்துள்ளார். ஊரடங்கிற்கு பிறகு ஆம்னி பேருந்துகளை இயக்குவது குறித்து இதுவரை வழிகாட்டுதல் நெறிமுறைகளை அரசு கூறவில்லை என தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் 25ம் தேதி முதல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக நாடு முழுவதும் பேருந்து சேவைகள், ரயில் மற்றும் விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன. 3ம் கட்டமாக 51 வது நாளாக ஊரடங்கு அமலில் உள்ளது. இந்த நிலையில், ஊரடங்கு முடிந்ததும் அரசு பேருந்து சேவை இயக்கப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது. மேலும் பயணிகள் மற்றும் ஊழியர்கள் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகளை வெளியிட்டது.
இந்த நிலையில், ஆம்னி பேருந்து பயண கட்டணம் இரு மடங்காக உயர்வதாக தமிழ்நாடு ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்க தலைவர் அப்சல் தகவல் அளித்திருந்தார். ஒரு கி.மீ-க்கு 1.60 ரூபாய் என கட்டணம் இருந்த நிலையில், 3.20 ரூபாயாக கட்டணம் வசூலிக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது என கூறியிருந்தார். ஊரடங்கு முடிந்து பேருந்து சேவை தொடங்கும் போது புதிய கட்டணம் அமலுக்கு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல ஆம்னி பேருந்துகளில் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகளையும் வெளியிட்டது என கூறியிருந்தார். இதனை முற்றலும் மறுத்த ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்க பொதுச்செயலாளர் அன்பழகன் தற்போது ஆம்னி பேருந்தில் எவ்வித கட்டண உயர்வும் இல்லை என தெரிவித்துள்ளார்.