Categories
மாநில செய்திகள்

இருமடங்காக உயர்கிறது ஆம்னி பேருந்து கட்டணம்: ஒரு கி.மீக்கு ரூ.3.20 ஆக கட்டணம் நிர்ணயம்!!

ஆம்னி பேருந்து பயண கட்டணம் இரு மடங்காக உயர்வதாக தமிழ்நாடு ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்க தலைவர் அப்சல் தகவல் அளித்துள்ளார்.

ஒரு கி.மீ-க்கு 1.60 ரூபாய் என கட்டணம் இருந்த நிலையில், 3.20 ரூபாயாக கட்டணம் வசூலிக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு முடிந்து பேருந்து சேவை தொடங்கும் போது புதிய கட்டணம் அமலுக்கு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் 25ம் தேதி முதல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக நாடு முழுவதும் பேருந்து சேவைகள், ரயில் மற்றும் விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன. 3ம் கட்டமாக 51 வது நாளாக ஊரடங்கு அமலில் உள்ளது.

இந்த நிலையில், ஊரடங்கு முடிந்ததும் அரசு பேருந்து சேவை இயக்கப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது. மேலும் பயணிகள் மற்றும் ஊழியர்கள் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகளை வெளியிட்டது. அதேபோல ஆம்னி பேருந்துகளில் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகளையும் வெளியிட்டது. முக்கியமாக தனிமனித இடைவெளி கடைபிடிக்க வேண்டியது மிகவும் அவசியம் என தெரிவித்துள்ளது. அப்படி சமூக இடைவெளியை கடைபிடிக்கும் பட்சத்தில் ஆம்னி பேருந்துகளில் 20 பேர் மட்டுமே பயணம் செய்ய முடியும்.

அதேபோல படுக்கை வசதி கொண்ட ஆம்னி பேருந்துகளில் தற்போது 15 பேர் மட்டுமே பயணிக்க முடியும். இதனால், 50% பயணிகளுடனே பேருந்துகள் இயக்கப்பட வேண்டியுள்ளது. இதனால், ஆம்னி பேருந்துகளுக்கு நஷ்டம் ஏற்படும் என்பதால், பயணிகளின் கட்டணத்தை இருமடங்காக உயர்த்தியுள்ளது. ஒரு கி.மீக்கு ரூ.1.60 ஆக இருந்த கட்டணம் தற்போது, ரூ.3.20 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இது தவிர எங்களுக்கு வேறு வழியில்லை என தமிழ்நாடு ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்க தலைவர் அப்சல் தெரிவித்துள்ளார்

Categories

Tech |