பிறக்கப்போகும் குழந்தை விற்பனைக்கு என பேஸ்புக்கில் விளம்பரம் கொடுத்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உலகில் ஒருபுறம் எத்தனையோ தம்பதியினர் குழந்தை பேறு கிடைக்காமல் கோவில், மருத்துவமனை என எத்தனையோ இடங்களுக்கு சென்று குழந்தைக்காக ஏங்கி நிற்கின்றனர். ஆனால் மற்றொருபுறம் பெற்ற குழந்தைகளை குப்பைத்தொட்டியில் போடுவதும் விலைக்கு விற்பதும் ஆக நடந்து வருகிறது.
இதே போன்ற ஒரு சம்பவமே மகாராஷ்டிராவிலும் நடைபெற்றுள்ளது. மகாராஷ்டிராவில் ரஞ்சங்கான் ஷென்பூஞ்சி பகுதியை சேர்ந்த 7 மாத கர்ப்பிணி ஒருவர் தனது கணவரை பிரிந்து வாழ்ந்து வந்துள்ளார். அண்ணனைப் பிரிந்து வாழும் அண்ணியின் சோகத்தை வருத்தத்தை உணர்ந்த கொழுந்தனார் சிவசங்கர்அண்ணிக்கு வேறு திருமணம் செய்து வைக்க முடிவு செய்துள்ளார்.
அண்ணிக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என்றால் அதற்கு பிறக்கப்போகும் குழந்தை தடையாக இருக்கும் என்ற காரணத்தினால் அண்ணியுடன் சேர்ந்து பிறக்கும் குழந்தையை விற்பனை செய்ய முடிவு செய்துள்ளார். இதனைத்தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் குழந்தையை வாங்கிக் கொள்ள விருப்பம் உள்ளவர்கள் அணுகவும் என விளம்பரம் ஒன்றை கொடுத்திருந்தார்.
இந்த தகவலை பார்த்த பெண்கள் குழந்தைகள் நலத்துறை, காவல்துறை போன்றவற்றிற்கு தகவல் அளித்துள்ளனர். கிடைக்கப் பெற்ற தகவலின் அடிப்படையில் இருப்பிடத்தை கண்டறிந்து சிவசங்கர் மீது வழக்கு பதிந்து காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.