நெல்லையில் நேற்று முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பிறந்தநாள் விழா சபாநாயகர் அப்பாவு தலைமையில் கொண்டாடப்பட்டுள்ளது.
மறைந்த தமிழக முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதியின் பிறந்தநாள் நேற்று நெல்லை மாவட்டத்தில் கொண்டாடப்பட்டுள்ளது. இந்நிலையில் கூடங்குளத்தில் நடைபெற்ற விழாவில் சபாநாயகர் அப்பாவு தலைமை தாங்கியுள்ளார். இதனையடுத்து கூடங்குளத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் கொரோனா நோயாளிகளுக்கும், பணிபுரியும் செவிலியர்களுக்கும் மதிய உணவு வழங்கியுள்ளார்.
அப்போது எம்.பி ஞானதிரவியம், இராதாபுரம் ஒன்றிய செயலாளர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஷ், பெல்சி, திமுக பிரமுகர்கள் உட்பட பலர் கலந்து கொண்டுள்ளனர். இதனை தொடர்ந்து பணகுடி பேருந்து நிலையத்தில் அமைக்கப்பட்ட கருணாநிதியின் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தியுள்ளார். மேலும் அப்பகுதியில் உள்ள 45 சவர தொழிலாளர்களுக்கு நிவாரண உதவி வழங்கிய அவர் ஏழை எளிய மக்களுக்கும் உணவு வழங்கியுள்ளார்.
இதனையடுத்து வள்ளியூர் பகுதியில் உள்ள நரிக்குறவர் காலனியை சேர்ந்த 120 குடும்பத்தினருக்கும், 60 திருநங்கைகளுக்கும் அரிசி, மளிகை பொருள்கள், காய்கறி உள்ளிட்ட பொருட்கள் அடங்கிய தொகுப்பை சபாநாயகர் அப்பாவு வழங்கியுள்ளார். இந்த நிகழ்ச்சியில் சுகாதார மேற்பார்வையாளர் டேனியல், வள்ளியூர் நகர பஞ்சாயத்து செயலாளர் கிறிஸ்டோபர் தாஸ், சுகாதார ஆய்வாளர் ஆறுமுகம் மற்றும் போலீசார் பங்கேற்றுள்ளனர்.