கரும்புகள் ஏற்றி வந்த லாரிகளுக்கு நடுவில் வந்த கார் மீது பின்னால் இருந்து வந்த லாரி மோதியதால் கார் சுக்குநூறாக நொறுங்கியது.
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிப்பட்டு காவல் நிலையம் அருகே நேற்று மாலை கரும்பு கட்டுகளை ஏற்றிக் கொண்டு லாரிகள் ஒன்றன்பின் ஒன்றாக வந்துகொண்டே இருந்தது. இந்த லாரிகளுக்கு நடுவில் ஒரு கார் ஒன்று வந்து கொண்டிருந்தது. காரின் பின்னால் கரும்பு ஏற்றிக்கொண்டு வந்த லாரி திடீரென காரின் மேல் வேகமாக மோதியது. இதில் காரின் பின் பகுதி மொத்தமாக நசுங்கியது.
லாரி மோதிய வேகத்தில் கட்டுப்பாட்டை இழந்த கார் வேகமாக சென்று முன்னாள் இருந்த லாரியின் மீது இடித்தது. இதில் காரின் முன்பகுதியும் சேதமடைந்தது. 2 லாரிகளுக்கும் இடையில் வந்த கார் மிகவும் சேதமடைந்தது. இந்த காரில் பெங்களூரை சேர்ந்த மணி <வயது 50>, அவரது மனைவி பரமேஸ்வரி <வயது 45>, மகன் சந்தீப் <வயது 23>, பரமேஸ்வரியின் தாய் சுசீலா <வயது 65> ஆகியோர் அதிர்ஷ்டவசமாக எந்தவித காயமும் இன்றி உயிர் தப்பியுள்ளனர்.
ஆர்.கே.பேட்டை அருகே உள்ள எழும்பி எனும் கிராமத்தில் தங்களது உறவினர்களை பார்த்துவிட்டு வரும் வழியில் இந்த விபத்து நடந்துள்ளது. விபத்து தொடர்பாக போலீஸார் லாரி டிரைவர் ராஜ்குமாரை <வயது 30>கைது செய்து விசாரித்து வருகின்றனர்.