சாத்தான்குளம் தந்தை – மகன் சித்தரவதை மரணம் தொடர்பான வழக்கில் சிபிசிஐடி போலீசார் அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.
சாத்தான்குளம் காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட தந்தை ஜெயராஜ், மகன் பென்னிக்ஸ் இருவரும் சித்திரவதை செய்யப்பட்டு, கோவில்பட்டி சிறையில் அடைக்கப்பட்டனர். இதையடுத்து இருவரும் அடுத்தடுத்து மரணமடைந்தது தமிழகம் முழுவதும் பூதாகரமாக மாறியது. இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதித்துறை நடுவர் பாரதிதாசனை விசாரணை அறிக்கை அளிக்கும்படி உத்தரவு பிறப்பித்தது. பாரதிதாசன் அளித்த விசாரணை அறிக்கையில் பல்வேறு அதிர்ச்சியளிக்கும் தகவல்கள் இருந்தன. இருவரது உடலிலும் காயங்களுக்கான அடையாளம் இருப்பதாக தெரிவித்த மாஜிஸ்ட்ரேட் பாரதிதாசன், இந்த வழக்கில் போலீசார் மீது வழக்கு பதிய முகாந்திரம் இருப்பது என்றும் கூறினார்.
சிபிசிஐடிக்கு மாற்றம்:
இதனை அடுத்து சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை இந்த வழக்கை சிபிசிஐடிக்கு மாற்ற உத்தரவு பிறப்பித்தது. சிபிஐ விசாரணை வரும் வரை சிபிசிஐடி இந்த வழக்கினை விசாரிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டது. அதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் மாலை வழக்கின் ஆவணங்கள் சிபிசிஐடி வசம் ஒப்படைக்கப்பட்டன. டிஎஸ்பி அனில் குமார் தலைமையிலான சிபிசிஐடி அதிகாரிகள் நேற்று காலை சாத்தான்குளம் அடைந்தனர்.
சிபிசிஐடியின் 12 குழுக்கள்:
கஸ்டடி மர்ம மரணம் என்று வழக்கு பதிவு செய்த சிபிசிஐடி போலீசார் 12 குழுக்களாகப் பிரிந்து இந்த மரணம் தொடர்பான அனைத்து இடங்களிலும் ஆய்வு செய்து, விசாரணை நடத்தினர். சாத்தான்குளம் காவல் நிலையம், ஜெயராஜ் – பென்னிக்ஸ் வீடு, ஜெயராஜ் நடத்திய கடை, சாத்தான்குளம் அரசு மருத்துவமனை, கோவில்பட்டி கிளை சிறை, கோவில்பட்டி அரசு மருத்துவமனை என வழக்கு தொடர்பான அனைத்து இடங்களிலும் சிபிசிஐடி போலீசார் விசாரணை ஒரே நேரத்தில் மேற்கொள்ளப்பட்டது.
4 காவலர்கள் மீது கொலை வழக்கு:
இதனால் அடுத்தடுத்து பல்வேறு அதிரடி திருப்பங்களை நோக்கி இந்த வழக்கு சென்று கொண்டிருந்தது. சிபிசிஐடி ஐ. ஜி சங்கரும் நேரடியாக களத்துக்கு வந்து விசாரணை மேற்கொண்டார். பின்னர் கஸ்டடி மர்ம மரணம் என்று பதிவு செய்யப்பட்டிருந்த வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டது. இரண்டு உதவி ஆய்வாளர்கள், இரண்டு காவலர்கள் உட்பட 4 பேர் மீது சிபிசிஐடி போலீசார் 4 பிரிவுகளில் கொலை வழக்கு பதிவு செய்தனர். இவர்கள் 4 பேரும் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்றும் எதிர்பார்க்கப்பட்டது.
எஸ்.ஐ ரகு கணேஷ் கைது:
இந்த நிலையில்தான் சம்பந்தப்பட்ட காவல் உதவி ஆய்வாளர் ரகு கணேஷ் சிபிசிஐடியிடம் விசாரணைக்கு ஆஜரானார். இதில் கைது செய்யப்பட்ட அவர் தூத்துக்குடி மாஜிஸ்திரேட் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டு தூத்துக்குடியில் பேரூரணி கிளை சிறையில் அடைக்கப்பட்டார். எஸ்.ஐ ரகு கணேஷை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கும் நடவடிக்கைகளை ஒருபுறம் சென்றுகொண்டு இருந்தாலும் மறுபுறம் மீதமிருந்த 3 காவலர்களையும் தீவிரமாக தேடி வந்தது சிபிசிஐடி.
காவல் ஆய்வாளரிடம் விசாரணை- கைது :
டிஜிபி திரிபாதி, ஏடிஜிபி முரளி ஜெய்ஹிந்த் வழிகாட்டுதலில் நள்ளிரவு முழுவதும் சிபிசிஐடி போலீசார் தேடிவந்தனர். இதில் மற்றொரு எஸ்.ஐ பாலகிருஷ்ணன் மற்றும் காவலர் முருகன் கைதுசெய்யப்பட்டனர். அதனைத் தொடர்ந்து மீதமிருந்த தலைமை காவலர் முத்துராஜாவை தேடும் பணியில் சிபிசிஐடி போலீசார் ஈடுபட்டதில் அவரும் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். பின்னர் இந்த வழக்கு தொடர்பாக சாத்தான்குளம் காவல் ஆய்வாளர் ஸ்ரீதரிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டு அவரையும் கைது செய்தனர்.
ஒரே நாளில் அதிரடி நடவடிக்கை:
மொத்தத்தில் நேற்று காலை தொடங்கிய வழக்கில் இன்று காலை 7 மணிக்குள் அடுத்தடுத்து அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்ட சிபிசிஐடி போலீசார் சம்பந்தப்பட்ட முக்கிய நான்கு காவல் அதிகாரிகளை கைது செய்திருப்பது மக்களிடையே சட்டத்தின் மீது நம்பிக்கை பாய்ச்சி உள்ளது.