தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் வசிப்போர் ஒரு நாளுக்கு 1 முறை மட்டுமே வெளியே வர வேண்டுமென அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.
கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு இன்று வரை ஐந்தாவது கட்ட நிலையில் தொடர்ந்து அமுல்படுத்தப்பட்டு வருகிறது. இருப்பினும், பல தளர்வுகள் தற்போது ஏற்படுத்தப்பட்ட நிலையில், பாதிப்பு நாளுக்கு நாள் இந்தியாவில் அதிகரித்து கொண்டே வருகிறது. நாளொன்றுக்கு சராசரியாக 10,000க்கும் மேற்பட்டோர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். எனவே பத்திற்கும் மேற்பட்ட மாநிலங்களில் மீண்டும் முழு ஊராடங்கை அமல்படுத்த உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் ஆலோசனை மேற்கொண்டு வருகிறது.
அதன்படி, தமிழகத்திலும் குறிப்பிட்டு 7 மாவட்டங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று தகவல்கள் வெளியாகின. மேற்கண்டபடி, முழு ஊரடங்கு அமல் படுத்தப்படவில்லை என்றாலும், சென்னையில் கொரோனா பாதிப்பு அதிகமுள்ள மண்டலங்களில், முழு ஊரடங்கு அமல் படுத்தப்படலாம் என்ற தகவல் வேகமாக கசிந்து வருகிறது. இதற்கு அமைச்சர் பாண்டியராஜன் விளக்கம் அளித்துள்ளார். அதில், தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகமாக பரவி வருகிறது.
சென்னையில் அதனுடைய பாதிப்பு அதிகமாக இருக்கிறது. குறிப்பாக தண்டையார்பேட்டையில் அதனுடைய பாதிப்பு அதிகம் காணப்படுவதால், அங்கு முழு ஊரடங்கு உத்தரவு கடைபிடிக்கப்படும் என தகவல்கள் வெளியாகி வருகின்றன. அதுகுறித்து முதலமைச்சரிடம் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆலோசனைக்குப் பின் முடிவுகள் எடுக்கப்படும் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.
அதேபோல் கொரோனா பாதிக்கப்பட்டு கண்டைன்மெண்ட் அல்லது தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்ட இடத்திலிருந்து, ஒரு நபர் ஒரு நாளுக்கு ஒருமுறை மட்டும்தான் வெளியே சென்று தேவையான அத்தனை பொருட்களையும் வாங்கி வரவேண்டும். மீறி இரண்டாவது முறை வெளியே சென்றால் அவர் 14 நாட்கள் தனிமைப் படுத்தப்படுவார் என்று அமைச்சர் பாண்டியராஜன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.