தங்களிடம் ஒரு லட்சம் வீரர்கள் இருப்பதாக லெபனானில் இயங்கி வரும் ஹிஸ்புல்லா பயங்கரவாத அமைப்பு தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
லெபனான் நாட்டில் செயல்பட்டு வரும் ஹிஸ்புல்லா பயங்கரவாத அமைப்பு அவ்வப்போது இஸ்ரேல் மீது தாக்குதலை மேற்கொண்டு வருகிறது. இதையடுத்து இஸ்ரேலும் ஹிஸ்புல்லாவின் தாக்குதலுக்கு பதிலடி கொடுத்து வருகிறது. இதற்கிடையே கடந்த ஆண்டு லெபனான் நாட்டின் தலைநகரான பெய்ரூட்டில் நடந்த வெடிவிபத்தில் சுமார் 215 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இதனால் லெபனான் நாட்டில் நீடித்து வரும் அரசியல் குழப்பத்தை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி கொண்ட ஹிஸ்புல்லா அமைப்பு அந்நாட்டில் ஆதிக்கம் செலுத்த முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி கடந்த வியாழக்கிழமை அன்று பெய்ரூட்டில் ஏற்பட்ட அரசியல் குழப்பத்தால் வன்முறை சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது.
அதில் ஏழு பேர் துப்பாக்கிச்சூட்டில் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில் ஹிஸ்புல்லா பயங்கரவாத அமைப்பின் தலைவரான ஹசன் நசருல்லா தங்களிடம் ஒரு லட்சம் வீரர்கள் இருப்பதாக தெரிவித்துள்ளார். அதாவது லெபனான் அரசு படையின் எண்ணிக்கையைவிட ஹிஸ்புல்லா பயங்கரவாத அமைப்பில் உள்ள வீரர்கள் அதிகம் என்று கூறப்படுகிறது. லெபனான் நாட்டின் ராணுவம் 85 ஆயிரம் வீரர்களை மட்டுமே கொண்டுள்ளது. ஆனால் ஒரு லட்சம் வீரர்கள் இருப்பதாகச் ஹிஸ்புல்லா பயங்கரவாத அமைப்பின் தலைவன் கூறியுள்ள கருத்தானது உள்நாட்டுப்போர் லெபனானில் ஏற்பட வழிவகுக்கும் என்றே கூறப்படுகிறது.