இந்தியாவில் உள்நாட்டு உர உற்பத்தியை மத்திய அரசு அதிக அளவில் ஊக்குவிக்கிறது. ஏனெனில் விவசாயிகளுக்கு தங்கு தடை இன்றி உரம் கிடைக்க வேண்டும் என்பதில் மத்திய அரசு மிகவும் கவனமாக இருக்கிறது. இந்தியாவில் உள்ள ராஷ்டிரிய ரசாயனம் மற்றும் உர நிறுவனம் ஜெர்மனியின் கே. ப்ளஸ் எஸ். மினரல்ஸ் அண்ட் அக்ரிகல்ச்சர் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் மூலம் விவசாயிகளுக்கு எம்ஓபி உரமானது தங்கு தடை இன்றி கிடைக்கும் என்று கூறப்படுகிறது. அதோடு கலப்பு ரகங்களின் பல்வேறு வகையிலான உள்நாட்டு உர உற்பத்தியை ஊக்குவிக்கவும் உதவுகிறது.
அதன் பிறகு உர உற்பத்தியில் சிறந்து விளங்கும் நாடுகளுடன் நீண்ட கால உறவிற்கும் வழி வகிக்கிறது. இந்நிலையில் உரம் மற்றும் மூலப்பொருட்களை இறக்குமதி செய்யும் இந்தியா தற்போது உள்நாட்டிலேயே உரத்தை தயாரிப்பது விவசாயிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருப்பதோடு, நிலையான விலையை பராமரிக்கவும் உதவுகிறது. மேலும் இந்தியாவைச் சேர்ந்த நிறுவனம் ஜெர்மனி நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளதால், ஒரு வருடத்திற்கு 1,05,000 டன் பொட்டாசியம் உரங்களை இந்தியாவுக்கு சப்ளை செய்யும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்த ஒப்பந்தத்தை மத்திய உரத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியா பாராட்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.