நாகர்கோவிலை சேர்ந்த காசி மீது புதிதாக கந்து வட்டி வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே இவன் பெண்களை ஏமாற்றிய வழக்கில் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டான்.
தற்போது, காசி மீது 3 வழக்குகளை காவல்துறை பதிவு செய்துள்ளது. குமரி மாவட்டம் நாகர்கோவிலை சேர்ந்தவர் காசி என்ற சுஜி. இவன், பேஸ்புக், டிவிட்டர், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதலங்களில் தன்னை பணக்காரன்போல் காட்டி கொண்டான். இதனால், அவரிடம் மயங்கிய பெண் டாக்டர், விமான பணிப்பெண் உள்ளிட்டோரிடம் பழகி அவர்களை ஆபாசமாக படம் எடுத்து மிரட்டி பணம் பறித்த வழக்கில், சென்னையைச் சேர்ந்த பெண் டாக்டர் ஒருவர் துணிச்சலாக புகார் கொடுத்ததால், போலீசார் காசியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இவனது, லேப்டாப்பில் 80 பெண்களுடன் பல்வேறு கோணங்களில் நெருக்கமாக இருந்த வீடியோ, படங்களை போலீசார் கண்டுபிடித்தனர். மேலும் காசி பயன்படுத்திய போலி முகநூல் கணக்குகள், இன்ஸ்டாகிராம் கணக்குகள் அனைத்தையும் போலீசார் முடக்கியுள்ளனர். தமிழகம் முழுவதும் பல பெண்களை ஏமாற்றி ஆபாச வீடியோக்கள் எடுத்து மிரட்டி பணம்பறித்த காசி மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. காசியின் நெருங்கிய வட்டத்தில் உள்ள 20 பேரை கன்னியாகுமரி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதில் சில அரசியல் கட்சியின் நிர்வாகிகளின் பெயர்களும், வி.ஐ.பிக்களின் பெயர்களும் அடிபடுவதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து, தற்போது காசி மீது 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஏற்கனவே பெண்களை ஏமாற்றிய வழக்கில் குண்டர் சட்டத்தில் கைதான காசி மீது தற்போது கந்து வட்டி வழக்கும் இவன் மீது போடப்பட்டுள்ளது. இன்று காலை வடசேரி காவல்நிலையத்தில் புதிதாக ஒரு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ட்ராவிட் என்பவர் காசி மீது புகார் கொடுத்துள்ளார்.
புகாரில் கூறியிருப்பதாவது, என்னிடம் 2 லட்ச ரூபாய் கந்துவட்டி பணம் கொடுத்துவிட்டு, அதற்கு ஈடாக தனது இரு சக்கர வாகனத்தையும், ஆர்.சி புக்கையும், காசில்லை ஆகியவற்றை பெற்றுக்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கந்துவட்டிக்கு வாங்கிய பணத்தை திருப்பி செலுத்திய பிறகும் தனது இருசக்கர வாகனத்தை தரவில்லை என புகார் அளித்துள்ளார். இதையடுத்து காசி மீது கந்துவட்டி வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.