ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டம் மாநிலத்தின் பொது விநியோகத்தையே சீர்குலைத்துவிடும் என்றும் ttv தினகரன் கருத்து தெரிவித்துள்ளார்.
ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு என்ற திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்படி ஒரு இந்திய குடிமகன் இந்தியாவின் எந்த மூலையில் வசித்தாலும் அங்கே அருகாமையில் உள்ள ரேஷன் கடையில் சென்று ரேஷன் பொருட்களை வாங்கி கொள்ளலாம் என்பதே இத்திட்டத்தின் பிரதான செயல்பாடு ஆகும். இதன் மூலம் இந்திய மக்களை எளிதாக ஒருங்கிணைக்க முடியும் என்று மத்திய அரசு கூறியுள்ளது.
அதன்படி, அடுத்த ஆண்டு ஜூலை மாதத்திற்குள் இத்திட்டத்தை அனைத்து மாநிலங்களும் அமல்படுத்த வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. தமிழகம் உள்ளிட்ட 10 மாநிலங்கள் இதனை நடைமுறைப்படுத்த அதிவிரைவாக தீவிரம் காட்ட வேண்டும் என்றும் அறிவுறுத்தி உள்ளது. இத்திட்டம் குறித்து பலரும் விமர்சனம் செய்து வருகின்றனர்.
குறிப்பாக திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் ஸ்டாலின் ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டம் நாட்டிற்கே ஆபத்தானது என்றும், பொது விநியோகம் என்பது மாநில அரசின் அடிப்படை உரிமைகள் அதில் கை வைப்பது தேன்கூட்டில் கல் எறிவதற்கு சமம் என்றும் கருத்து தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் அமமுக கட்சியின் தலைவர் டிடிவி தினகரன் அவர்கள் இது குறித்து கூறுகையில், ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டத்தை அமல் படுத்துவதன் மூலம் பொது வினியோக செயல்பாடுகளானது மாநிலங்களில் முற்றிலும் சீர்குலைந்து விடும் ஆபத்து உள்ளது என்றும், தமிழகத்தில் ஏராளமான வடமாநிலத்தைச் சேர்ந்தவர்கள் வேலை பார்க்கிறார்கள் அவர்கள் அனைவரையும் ரேஷன் கடைகளில் பொருட்கள் வாங்க அனுமதித்தால் தமிழக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் ஆபத்தை விளைவிக்கக்கூடிய இத்தகைய புதிய திட்டங்களை தமிழக அரசு ஆரம்ப கட்டத்திலேயே தவிர்க்க வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.