நாட்டில் எந்தப் பகுதியில் வசித்தாலும் அங்குள்ள ரேஷன் கடைகளில் பொருட்கள் வாங்கிக் கொள்ளும் வகையில், ‘ஒரே தேசம், ஒரே ரேஷன் கார்டு’ திட்டம் மத்திய அரசால் கொண்டு வரப்பட்டது. முன்னதாக, இது தொடர்பாக பேசிய உணவு மற்றும் பொதுவிநியோகத் துறை அமைச்சர் ராம் விலாஸ் பஸ்வான் இந்தாண்டு ஜூன் 30க்குள் இத்திட்டம் அமல்படுத்தப்படும் என்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் இன்று மக்களவையில் கேள்வி ஒன்றுக்குப் பதிலளித்த பஸ்வான், 2020ஆம் ஆண்டு ஜூன் 1ஆம் தேதி முதல் ‘ஒரே தேசம், ஒரே ரேஷன் கார்டு’ திட்டம் செயல்படுத்தப்படும் என்று தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், ”வேலைக்காக வெளிமாநிலங்களுக்கு இடம்பெயர்ந்தவர்களுக்கு பெரிதும் உதவும் இந்தத் திட்டத்தின் மூலம் கூலித் தொழிலாளிகள், கடைநிலை ஊழியர்கள், வேலைக்காக அடிக்கடி இருப்பிடத்தை மாற்றுபவர்கள் ஆகியோரும் பயன்பெறுவார்கள்.
உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ், நாட்டில் எந்த பகுதியிலுள்ள ரேஷன் கடைகளிலும் ரேஷன் பொருட்களை அவர்கள் பெற்றுக்கொள்ளலாம். இந்தத் திட்டத்தை முறையாக நடைமுறைப்படுத்த இந்திய தர நிர்ணய ஆணையத்திடம் மத்திய அரசு கேட்டுள்ளது. ஆதார் அட்டை, பயோமெட்ரிக் அடையாளங்கள் ஆகியவற்றின் மூலம் தகுதியுள்ள பயனாளிகளுக்கு ரேஷன் பொருட்கள் வழங்கப்படும். ஆகவே, அனைத்து ரேஷன் கடைகளும் இணையம் வழியாக இணைக்கப்பட்டு விரைவில் நடைமுறைப்படுத்தப்படும்” என்றார்.