திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் தாலுகா பூண்டி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி லோகநாதன்(61) என்பவரின் மகன் சிவமுருகன்(15). அதே ஊரைச் சேர்ந்த விவசாயி முருகன்(48) என்பவரின் மகன் உமாநாத்(15). இருவரும் அங்குள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகின்றனர்.லோகநாதன், முருகன் ஆகிய இருவரும் தங்களது மகன்களுக்கு மதிய உணவு எடுத்துக்கொண்டு பள்ளிக்குச் சென்றனர். அப்போது லோகநாதன், முருகனின் மகன் உமாநாத்திடம் ‘ஏன் ஒழுங்காக படிக்காமல் இருக்கிறாய்’ என்று திட்டியதாகக் கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த முருகன், “என் மகனை ஏன் நீ கண்டிக்கிறாய்?” என்று கேட்டுள்ளார். இதனையடுத்து இருவருக்குமிடையே ஏற்பட்ட தகராறில், முருகன், லோகநாதனை கீழே தள்ளியுள்ளார். இதில் தவறி விழுந்த அவர் சுயநினைவை இழந்தார்.பின்பு, அருகில் உள்ளவர்கள் மன்னவனூரிலுள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்குக் கொண்டு சென்றனர். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இதனால் அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் லோகநாதன் குடும்பத்திற்கு தகவல் தெரிவித்தனர்.இதுகுறித்து லோகநாதன் மனைவி சாந்தி, கொடைக்கானல் காவல் நிலையத்தில் கொடுத்த புகார் அளித்தார். இதனையடுத்து, மாணவர் உமாநாத் அவரது தந்தை முருகன் ஆகியோரிடம் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.