சென்னை 200 அடி சாலையில் கண்டெய்னர் லாரி ஒன்று பாடியை நோக்கி வந்துகொண்டிருந்தது. அப்போது, கண்டெய்னர் லாரியின் பின்னால் நெல்லூரிலிருந்து கோயம்பேடு வரை செல்லும் அரசுப் பேருந்து வேகமாக வந்தது. அப்போது, லாரியை முந்த அரசுப் பேருந்து முயன்றபோது நிலைதடுமாறி லாரியின் பின்பக்கத்தில் வேகமாக மோதி விபத்துக்குள்ளானது. இதில் அரசுப் பேருந்தின் நடத்துநர் வீரமுத்து (42) என்பவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து வாகன ஓட்டிகள் காவல் துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து விரைந்து வந்த காவல் துறையினர் காயமடைந்த ஓட்டுநர் கோவிந்தசாமி உள்பட 12 பேரை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், விபத்து குறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.