பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தின் போது ஒரே பதவி ஒரே ஓய்வூதிய திட்டத்தின் கீழ் ராணுவ ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு ஓய்வூதிய தொகையை உயர்த்துவதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் 2019-ம் ஆண்டு ஜூன் மாதம் 30-ம் தேதி வரை ஓய்வு பெற்றவர்கள் பயனடைவார்கள். கடந்த 2015-ம் ஆண்டு ஒரே பதவி ஒரே ஓய்வூதிய திட்டத்தை மத்திய அரசு அறிவித்த நிலையில், 5 வருடங்களுக்கு ஒரு முறை திட்டத்தில் மாற்றம் கொண்டுவரப்படும் என்றும் மத்திய அரசு தெரிவித்தது.
ஆனால் இந்த திட்டத்தை வருடந்தோறும் மாற்றி அமைக்க வேண்டும் என முன்னாள் ராணுவ வீரர்கள் சங்கம் மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்தது. இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட நிலையில், கோர்ட் ஒப்புதல் வழங்கியது. இதனையடுத்து தற்போது மத்திய அரசும் இந்த திட்டத்திற்கு ஒப்புதல் வழங்கியுள்ளது. மேலும் இதனால் 25 லட்சத்திற்கும் அதிகமான ராணுவ ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள் பயன்பெறுவார்கள் என்று கூறப்பட்டுள்ளது.