நாமக்கல் மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா சிங் கொல்லிமலையில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகளை நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார்.
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா சிங் நேற்று கொல்லிமலை சோளக்காடு பயணியர் மாளிகையில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகளை நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார். இந்த திட்ட பணிகள் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை, பழங்குடியினர் நலத்துறை, வேளாண் விற்பனை மற்றும் வணிகத்துறை, மகளிர் திட்டத்துறை மற்றும் ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சி துறைகளின் மூலம் நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் அரசு ஏகலைவா மாதிரி உண்டு உறைவிடப்பள்ளியில் 12ஆம் வகுப்பு படிக்கும் பழங்குடியினர் மாணவ மனவியர்களிடம் ஆன்லைன் கல்வி குறித்து கேட்டறிந்துள்ளார்.
இதனையடுத்து சோளக்காடு ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு சென்ற ஆட்சியர் அங்கு விற்பனை செய்யப்படும் அன்னாசி பழத்தின் தரம் குறித்தும் விற்பனை முறை குறித்தும் ஆலோசனை நடத்தியுள்ளார். இதனைத்தொடர்ந்து கொல்லிமலையில் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பில் பயிரிடப்பட்ட பழவகைகள் மற்றும் வாசனை பொருட்களான லவங்கம், கிராம்பு, ஜாதிக்காய், பிரியாணி இலை உள்ளிட்ட பயிர்களையும் பார்வையிட்டுள்ளார்.
இந்த ஆய்வுகளை மேற்கொண்ட பின்பு கடைசியாக வழவந்திநாடு அரசு மருத்துவமனைக்கு சென்று பொதுமக்களுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை முறைகள் குறித்தும் மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா சிங் கேட்டறிந்துள்ளார். இந்த ஆய்வில் பழங்குடியினர் நலத்துறை அலுவலர் ராமசாமி, தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் கணேசன், உதவி இயக்குனர் கார்த்திக், வேளாண்மை அலுவலர் கலைச்செல்வி, மகளிர் மகளிர் திட்ட இயக்குனர் பிரியா, கொல்லிமலை தாசில்தார் கண்ணன், வட்டார வளர்ச்சி அலுவலர் நடராஜன் மற்றும் ரவிசந்திரன் உட்பட அரசு அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டுள்ளனர்.