மதுரை மாவட்டத்தில் மோதகம் என்னும் கிராமத்தில் பாலமுருகன் என்பவர் வசித்து வருகிறார். இவர் பி.இ, எம்.பி.ஏ என்ற பட்டப்படிப்பை முடித்துவிட்டு பெரிய நிறுவனங்களில் மார்க்கெட்டிங் பிரிவில் பணிபுரிந்து வந்தார். கொரோனா ஊரடங்கின் போது தனது பணியை விட்டுவிட்டு முழு நேர விவசாயியாக மாறி விட்டார். இவர் தனக்கு அனுபவம் இல்லாவிட்டாலும் வெறும் திட்டமிடுதல் மட்டும் சரியாக இருந்தால் விவசாயத்தில் சாதித்துவிடலாம் என்பதை நம்பி இறங்கினார்.
இவருடைய தந்தை மீனாட்சி சுந்தரம் என்பவர் விமானப்படை பிரிவில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர் ஆவார். இவருக்கு சொந்தமான 20 ஏக்கர் நிலம் மதுரையில் உள்ளது. இதனை பராமரிப்பதற்காக அவர் ஓய்வுக்குப் பின் மதுரைக்கு வந்துவிட்டார். சுமார் இரண்டு வருடங்களுக்கு முன் 4 ஏக்கரில் ரெட் லேடி வகை பப்பாளியும், சிவப்பு கொய்யாவும் நடவு முறையில் பயிர் செய்தார். இதனை இயற்கை சாகுபடியில் தான் வளர்க்க வேண்டும் என்பதில் அவர் உறுதியாக இருந்தார்.
தற்போது 1,400 பப்பாளி மரங்களும் 1400 கொய்யா மரங்களும் 4 ஏக்கரில் வளர்கின்றன. இவர் நட்ட கொய்யா மரங்கள் சரியாக எட்டாம் மாதத்தில் காய்க்க தொடங்கியது. ஆனால் மரம் பருக்க வேண்டும் என்பதால் அதனுடைய காய்களை உதிர்த்து விட்டனர். தற்போது அனைத்து கொய்யா மரங்களும் நன்கு காய்த்து கொண்டிருக்கிறது. கொய்யா, பப்பாளி மட்டும் இவர்கள் வளர்க்கவில்லை. அதுபோக இரண்டு ஏக்கரில் தீவனப்பயிரும் வளர்கிறார்கள். மேலும் மற்ற விவசாயிகளிடமிருந்து நாட்டு மாடுகளின் கோமியம், சாணம் போன்றவற்றை வாங்கி ஜீவாமிர்தம் தயாரித்து பாலமுருகன் தன்னுடைய மரங்களுக்கு சொட்டுநீர் பாசனம் மூலம் பாய்ச்சி கொண்டிருக்கிறார்.
இவர் ஒரு தனி நபராக நின்று ஒரு ஏக்கருக்கு 3 மணி நேரத்தில் உரம் பாய்ச்சி விடுகிறாராம். மேலும் பூச்சிகளை விரட்ட வேப்ப எண்ணெய் பயன்படுத்துகிறார். இதனையடுத்து அடர் நடவு முறையில் 6-க்கு 6 அடி என்ற இடைவெளியில் மரங்களை நட்டுள்ளதால் கவாத்து செய்வதற்கு எளிதாக உள்ளது என்றும் கூறியுள்ளார். அதுமட்டுமின்றி இவர் செம்பறி ஆடுகளையும் வளர்த்து வருகிறார். மேலும் 10 ஏக்கரில் மக்காச்சோளம், குதிரைவாலி போன்றவற்றையும் பயிரிட்டுள்ளார்.
இவரது கொய்யா மூன்று நாட்களில் 120 கிலோ கொய்யா கிடைக்கிறதாம். இவை அனைத்தையும் ஆன்லைன் ஆப் மூலம் ஆர்டர் செய்பவர்களுக்கு விற்பனை செய்து வருகிறாராம். மேலும் கொய்யா, பப்பாளி, குதிரைவாலி அரிசியை ஆர்டர் செய்பவர்களுக்கு இவரே நேரில் சென்று டெலிவரி செய்கிறார்களாம். இதனால் இடைத்தரகர் இல்லாமல் ஓரளவு லாபம் பார்க்க முடிகிறது என்று கூறியுள்ளார். இவர் இயற்கை முறையில் விவசாயம் செய்து லாபம் ஈட்டுவது அனைத்து விவசாயிகளுக்கும் ஒரு முன்னுதாரணமாக இருக்கின்றது.