சென்னையில் ஆன்லைன் வகுப்பு படிக்க மொபைல் இல்லாததால் மன விரக்தி அடைந்த மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மத்திய, மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இதனுடைய பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக ஆகஸ்ட் 31ம் தேதி வரை தளர்வுகள் இல்லாமல், பல மாநில முதல்வர்கள் ஊராடங்கை நீட்டித்து உத்தரவிட்டுள்ளனர். தமிழகத்திலும் இதே நிலை தொடர பள்ளி , கல்லூரி உள்ளிட்ட கல்வி வளாகங்கள் திறப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக மாணவர்கள் ஆன்லைன் மூலம் வகுப்புகளை கவனித்து வருகின்றனர்.
பல மாணவர்கள் செல்போன் இல்லாததால், கவனிக்க முடியாமல் சிரமத்திற்கு ஆளாகிறார்கள். அந்த வகையில், சென்னையில் யாமினி என்ற +2 படிக்கும் மாணவி தனது வீட்டில் செல்போன் இல்லாததால், சித்தி வீட்டுக்கு சென்று செல்போனில் ஆன்லைன் கல்வி பயின்று வந்துள்ளார். இந்நிலையில் ஏதோ ஒரு காரணத்தினால், ஏற்பட்ட மன உளைச்சலால் சித்தி வீட்டிற்கு சென்று அவரது மொபைல் மூலம் ஆன்லைன் கல்வி கற்க தயங்கியுள்ளார்.
மேலும் தன்னிடம் செல்போன் இல்லாததால், ஆன்லைன் கல்வி கற்க முடியாமல் போக, அதனால் ஏற்பட்ட மன அழுத்தத்தில், தனது வீட்டிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து ஆன்லைன் கல்வி கற்க முடியாமல் பல மாணவர்கள் இது போன்ற தவறான முடிவுகளை எடுத்து வருகிறார்கள். தமிழக அரசு இதற்கு உடனடியாக நல்ல தீர்வு வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.