ஆன்லைன் வகுப்புகளில் விதிமுறைகளை மீறினால் அந்த பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு தெரிவித்துள்ளது.
தற்போது இருக்கும் சூழலில் மாணவர்கள் பள்ளி சென்று கல்வி கற்பது என்பது கேள்விக்குறியான ஒன்றாக உள்ளது. இதனால் ஆசிரியர்கள் மாணவர்களுக்காக இணையம் வழி பாடங்களைக் கற்பித்து வருகிறார்கள். ஆனால் இந்த ஆன்லைன் வகுப்புகள் எல்லா மாணவர்களுக்கும் சமமாக சென்று அடைகிறதா? இந்த வகுப்புகள் பாதுகாப்பானதுதானா? இதுகுறித்து பல்வேறு கேள்விகள் எழுந்து வந்த நிலையில் இந்த வழக்கு உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
அதில் தெளிவான முடிவுகள் எடுக்கப்படாத நிலையில் தற்பொழுது ஆன்லைன் வகுப்புகளுக்கு தடை கோரியும், விதிகளை வகுக்க கோரியும் தொடரப்பட்ட வழக்குகள், நீதிபதிகள் சுந்தரேஷ் மற்றும் ஹேமலதா அடங்கிய அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. இந்த விசாரணையில், தமிழக அரசு சார்பில் கூடுதல் அரசு வழக்கறிஞர் ஆஜராகி, விதிமுறைகளை மீறும் பள்ளிகளுக்கு எதிராக புகார்கள் வந்தால் அரசு கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.ஆன்லைன் வகுப்புகளுக்கு நுழையும் பொழுது மாணவர்கள் ஆபாச இணையதளங்களுக்குள் நுழைய முடியாதபடி செய்து அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று தெரிவித்த நீதிபதிகள், இந்த விசாரணையிலும் தீர்ப்பை வழங்காமல், தேதி குறிப்பிடாமல் வழக்கை தள்ளிவைத்தனர்.