பொறியியல் படிப்புகளை போன்று கலை அறிவியல் படிப்புகளுக்கும் ஆன்-லைனில் கலந்தாய்வு நடத்த தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
கலை அறிவியல் படிப்புகளுக்கு கலந்தாய்வு நடத்துவது குறித்து உயர் கல்வித்துறை முதன்மை செயலாளர் தலைமையில் நடைபெற்ற ஆய்வு கூட்டத்தில் அனைத்து பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் மற்றும் உயர்கல்வித் துறை தொடர்புடைய பல்வேறு அதிகாரிகள் கலந்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் தேர்ச்சி விகிதத்தை அதிகரிப்பது குறித்த வழிமுறைகள், கல்லூரிகளை நவீனப்படுத்துதல், தொழில்நுட்ப மயமாக்கல், தானியங்கி மயமாக்கல், உள் கட்டமைப்புகளை மேம்படுத்துதல் உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.மாணவர்களுக்கு திறனை மேம்படுத்தும் வகையில் பயிற்சி அளித்தல், மாநிலத்தின் 5 பல்கலைக்கழகங்களை 2 ஆண்டுகளில் நாட்டில் உள்ள சிறந்த 100 பல்கலைக்கழக பட்டியலிலும்,
5 ஆண்டுகளில் உலக அளவில் ஆயிரம் பல்கலைக்கழங்களின் பட்டியலிலும் இடம் பெறச் செய்தல், பல்கலைக்கழங்களில் ஆய்வு மற்றும் புதிய கண்டுபிடிப்புகள் தொடர்பாக திறன் மேம்படுத்துதல் உள்ளிட்டவை குறித்தும் ஆலோசிக்கப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்போது பொறியியல் படிப்புகளை போன்று கலை அறிவியல் படிப்புகளுக்கும் ஆன்-லைனில் கலந்தாய்வு நடக்கும் யோசனை முன்வைக்கப்பட்டது. அதனை தலைமைச் செயலாளரும் ஏற்றுக்கொண்டு அதற்கான நடவடிக்கைகளை தொடங்க அறிவுறுத்தி உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.