தமிழகத்தில் காற்றாடி மற்றும் மாஞ்சா நூலுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள போதிலும், அவற்றின் ஆன்லைன் மூலம் வெளிமாநிலங்களில் இருந்து வாங்கியது தொடர்பாக அரசு பேருந்து ஓட்டுநர் உட்பட நான்கு பேர் சென்னையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை திருவெற்றியூர் பகுதியில் ஆன்லைன் மூலம் ஆர்டர் செய்து காற்றாடி, மாஞ்சா நூல் போன்றவற்றை சிலர் வாங்குவதாக வண்ணாரப்பேட்டை காவல் துணை ஆணையர் சுப்புலட்சமிக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் நடத்தப்பட்ட சோதனையில் ராஜஸ்தான், குஜராத், கர்நாடகா போன்ற வெளிமாநிலங்களில் இருந்து ஆன்லைன் மூலம் மூன்று பார்சல்கள் பெறப்பட்டதும், அவற்றின் மாஞ்சா நூல், காற்றாடி போன்றவை இருந்ததும் தெரிய வந்தது.
ஒரு பார்சலில் 40 காற்றாடிகள் வீதம் 120 காற்றாடிகள் மற்றும் மாஞ்சா நூல் இருந்ததால் அவற்றை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். இந்த பார்சல்கள் சென்று சேர வேண்டிய முகவரி குறித்து நடத்தப்பட்ட விசாரணையின் முடிவில் மாநகர அரசு பேருந்து ஓட்டுநர் பாலசந்தர், கல்லூரி மாணவர் வெங்கடேசன் உள்ளிட்ட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.