தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே கரிவலம்வந்தநல்லூர் என்ற பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியில் ஒடிசா மாநிலம் பட்ராக் பகுதியைச் சேர்ந்த அஜய் குமார் பண்டல் மற்றும் அவருடைய மனைவி பந்தனா மஜ்கி ஆகியோர் தங்கி இருந்து வேலை பார்த்து வந்துள்ளனர். இவர்களுக்கு திருமணம் ஆகி 3 வருடங்கள் ஆகிறது. இந்நிலையில் பந்தனாவுக்கு ஆன்லைன் ரம்மி மீது அதிக மோகம் இருந்ததால் அதில் விளையாடி 70,000 ரூபாய் வரை பணத்தை இழந்துள்ளார். இதனால் அஜய்குமார் தன்னுடைய மனைவியை விளையாடக்கூடாது என்று கண்டித்துள்ளார்.
இதனால் மனமுடைந்து போன பந்தனா கணவர் வேலைக்கு சென்ற நேரத்தில் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். வேலைக்கு சென்று விட்டு வீடு திரும்பிய கணவர் தன்னுடைய மனைவி தூக்கில் தொங்குவதை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார். இது குறித்து காவல் துறையினருக்கு அளிக்கப்பட்ட தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல் துறையினர் பந்தனாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டம் தடைச் சட்டத்திற்கு சட்டப்பேரவையில் மசோதா கொண்டு வந்த போதிலும் ஆளுநர் கையெழுத்திடாமல் அலட்சியப் போக்கு காட்டுவதால் தான் இது போன்ற சம்பவங்கள் நடந்து வருவதாக பல்வேறு தரப்பினரும் குற்றம் சாட்டியுள்ளனர்.