திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் ஆன்லைன் வகுப்பால் மன உளைச்சலுக்கு ஆளான பத்தாம் வகுப்பு மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
அவிநாசி அருகே உள்ள பி.எஸ். சுந்தரம் வீதியைச் சேர்ந்தவர் செந்தில் நாதன். தனியார் வங்கியில் ஏ.டி.எம். மையத்தில் செக்யூரிட்டியாக பணியாற்றிவரும் இவருக்கு பிரதீபா என்ற மனைவியும் 3 மகன்களும் இருந்தனர். இவரது மூத்த மகன் சஞ்சய் அவினாசி அடுத்த நாதம்பள்ளி பாளையத்தில் உள்ள தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார்.
இதனிடையே சஞ்சய் கடந்த சில நாட்களாக ஆன்லைன் வகுப்புகளில் சரியாக கவனம் செலுத்தாததால் பெற்றோர் கண்டித்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் மாணவன் சஞ்சய் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அவினாசி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.